
ஆண்-பெண் சமம், ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் ஆண்களுடன் போட்டி போட்டு முன்னேறி வந்த பெண்கள் தற்போது ராணுவத்திலும் முத்திரை பதிக்க காத்திருக்கின்றனர்.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.
உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்கு ராணுவத்தில் ஆட்சேர்ப்பு என்பது உள்ளது. மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ ஆட்சியும் நடைபெறுகிறது.
ரஷியா, கொரியா, இஸ்ரேல், ஈரான், கியூபா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் 18 வயது நிரம்பிய வாலிபர்கள் கட்டாய ராணுவ சேவையாற்ற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளில் ராணுவத்திற்கு சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று.
இருப்பினும் ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது இன்றளவும் ஒருசில நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் கட்டாயமாக ராணுவத்தில் கண்டிப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கையை நார்வே, சுவீடன், இஸ்ரேல், வடகொரியா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் போன்ற நாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் தற்போது வரை 18 வயது நிரம்பிய வாலிபர்கள் 2 ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவையாற்ற வேண்டும் என்னும் நடைமுறை உள்ளது. இந்தநிலையில் பெண்களுக்கும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் அரசாங்கம் மசோதா நிறைவேற்றி தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை மூலம் இனி 18 வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் தங்களது பெயா்களை ராணுவப் பணிக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
டென்மார்க் முதன்முறையாக பெண்களுக்கு கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்தி இருப்பது நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அதன்படி 18 வயது நிரம்பிய பெண்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாய ராணுவ சேவையாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர். முதலில் விருப்பம் உடையவர்கள் குலுக்கல் முறையில் கட்டாய ராணுவ சேவைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பின்னர் அவா்களில் விருப்பம் தெரிவிக்காதவா்கள் குலுக்கல் முறையில் இரண்டாவதாகவும் ராணுவப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். நோயுற்றவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு விலக்களிக்கப்பட உள்ளது. இதனால் நாட்டின் ராணுவம் மேலும் வலிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சேவை திட்டத்தை மேற்பார்வையிடும் கர்னல் கென்னத் ஸ்ட்ரோம், இந்த நடவடிக்கை தற்போதைய நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக நாடுகளின் போர் பதற்றம் போன்ற சூழலுக்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். கட்டாய ராணுவ சேவை ஆற்றுபவர்களின் எண்ணிக்கையை 2033-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 4,700 இலிருந்து 6,500 ஆக உயர்த்துவதன் மூலம் ஒட்டுமொத்த போர் சக்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.