
ராணுவம் ஒருவருக்கு நன்மையைத் தருகிறதா?
ராணுவம் என்றால் பலருக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி உடலளவிலும், மனதளவிலும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னென்ன நன்மைகள் இதில் பெறமுடியும்?
கிடைக்கும் நன்மைகள்:
இந்திய ராணுவம் நம் நாட்டின் பெருமை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக நிற்கும் ஒரு துறை. இந்திய ராணுவத்தில் பணியாற்றுவது பலருக்குத் தனிப்பட்ட வளர்ச்சியும், மரியாதையையும் வழங்குகிறது. ஒரு ராணுவ வீரரின் கடமை என்பது தேசத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்த தைரியம், விசுவாசம் மற்றும் தன்னலமற்ற சேவை (selflessness) ஆகியவை சேர்ந்த ஒரு கலவை.
ராணுவம் ஒருவருக்கு நிலையான தொழில், திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், மொழி வேறுபாடற்ற நட்புறவு நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றைத் தருகிறது. இதோடு வாழ்க்கைக்குத் தேவையான சம்பளம், உலகத் தரம் வாய்ந்த பயிற்சி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றின் அனுபவங்களையும் பெற முடியும்.
ராணுவ வீரர்களின் குடும்பங்களும் பல பலன்களைப் பெற முடிகிறது. இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு என தனியாக வீட்டு வசதி, சுகாதாரம், ஒதுக்கப்பட்ட அரசு வேலை ஒதுக்கீடுகள் (reserved government job quotas), அவர்களின் குழந்தைகளுக்கான உதவித் தொகையுடன் கூடிய பிரத்தியேக ராணுவப் பள்ளிகளில் கற்கும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மூலம் ஒவ்வொரு ராணுவவீரனின் குடும்ப நலனை அரசாங்கம் உறுதி செய்கிறது.
சற்று தியாகமும் செய்தாக வேண்டும்:
இருப்பினும், இந்த வேலை குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய வைக்கிறது. ஒரு ராணுவ வீரர் தன் குடும்பம், தனிப்பட்ட தருணங்களைச் சேர்த்து வீட்டை விட்டு வெகுநாட்கள் பிரிந்திருக்க வேண்டிருக்கும்.
இதுபோக கடுமையான தட்பவெப்ப நிலைகளைத் (harsh climates) தாங்கிக்கொள்வது, உடல் மற்றும் மனதை முழு நேர ராணுவத்தில் அர்ப்பணிக்க வேண்டியிருக்கும், எப்போது வேணுமானாலும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வது என்பது அவர்களின் தியாகங்களில் மிக முக்கியமானதாகும்.
ஒரு ராணுவ வீரர் அன்றாட சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருப்பது மற்றும் வயதிற்கேற்ற வாழ்க்கை சந்தோஷங்களை இழக்க நேரிடும். ஆனால், இந்தத் தியாகங்கள்தான் பாதுகாப்பில் பல்வேறு விஷயங்களை மேம்படுத்துகிறது. ஏனென்றால் ஒரு தேசத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு ராணுவ வீரரின் கவனம் மிக முக்கியமான ஒன்று, அவர் கடைபிடிக்கும் இந்த ஒழுக்கம்தான் எந்த ஒரு நொடியிலும் அவரைச் செயல்படத் தயாராக இருக்க வைக்கும். ‘தங்களைவிட மேலான ஒன்றுக்காக நாம் சேவை செய்ய வேண்டும்’ என்ற அவர்களின் அசைக்க முடியாத உறுதிதான் நாட்டின் பாதுகாப்பில் பிரதிபலிக்கிறது.
இப்படிப்பட்ட இந்த உன்னதமான தொழிலில் சேருபவர்கள் தாங்கள் செய்யும் வேலைகளுக்குக் கிடைக்கும் வெகுமதிகளை (Rewards) விட சவால்களைத்தான் அதிகமாக சந்திக்கக் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, இந்திய ராணுவத்தில் சேர்வதன் மூலம் ஒவ்வொரு நபரும் தங்கள் தேசத்திற்குச் சேவை செய்வது மட்டுமல்லாமல், 'கடமை, மரியாதை மற்றும் தியாக உணர்வு என்றால் என்ன?' என்று கேட்பவர்களுக்கும் பல தலைமுறைகளாக தேசப்பற்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.