இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக 1ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்காள விரிகுடா இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.