எங்கள் நாட்டின் யுரேனியத்தை திருட திட்டமிடுகிறது அமெரிக்கா- ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு..!

us - iran conflict
us - iran conflict image source: the economic times
Published on

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய நேரப்படி நாளை காலை 5:30 மணி வரை ஈரானுக்கு கெடு விதித்து அதன் பிறகு ஈரானில் எந்த ஒரு பாலமும் மின் உற்பத்தி நிலையமும் இருக்காது என எச்சரித்துள்ள அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மறுத்து பதிலடி தந்து வருகிறது ஈரான்.

இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்டு ஈரானில் விழுந்த அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை மீட்கும் நடவடிக்கையை, தங்களின் அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் (சுமார் 450 கிலோவுக்கும் மேல்) திருடுவதற்கான மறைமுகத் திட்டமாக அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த மீட்புப் பணி ஒரு "ஏமாற்று வேலை" மற்றும் "தோல்வியுற்ற முயற்சி" என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நேற்று (ஏப்ரல் 6-ஆம் தேதி) செய்தியாளர் சந்திப்பின்போது, "தங்கள் வான்வெளியை மீறி சமீபத்தில் நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கை, யுரேனியத்தைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டிருந்திருக்கக்கூடும்" என்று கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிசெய்யும் விதமாக, ஈரானில் தற்போது 400 முதல் 450 கிலோ வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் கைவசம் இருப்பதாக ஈரான் கூறுகிறது.


கடந்த 3-ஆம் தேதி, எஃப்-15இ (F-15E) ரகப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த அதிகாரியை மீட்க அமெரிக்கா தந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஈரானியப் படைகளின் செயல்பாடுகளைச் சீர்குலைக்க விமானங்களையும், சிறப்புப் படையினரையும் அனுப்பி இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானியை மீட்டதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்க அங்குள்ள யுரேனியத்தைக் கைப்பற்ற அல்லது அழிக்க அமெரிக்கா பரிசீலித்து வந்ததாகவும், விமானி மீட்பு நடவடிக்கையின் போர்வையில் அமெரிக்கா ஏமாற்ற முயன்றதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. யுரேனியம் திருட்டு முயற்சி நடந்ததாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கையை 1980-இல் தோல்வியடைந்த பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையுடன் ஒப்பிட்டு, “அமெரிக்காவிற்கு இது ஒரு பெரும் தோல்வி மற்றும் அவமானகரமான பேரழிவு” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானாலும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் யுரேனியம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்தியக்கடலோர காவல்படை பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்?
us - iran conflict

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com