
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை ஏற ஏற அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்வதை லாபகரமாக கருதுவதுடன், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் தங்கத்தை வாங்குவது அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் பெண்களும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று (செப்டம்பர் 2-ம்தேதி) ஒரு கிராம் தங்கத்தின் விலை 9725 ரூபாய்க்கும் ஒரு சவரன் 77,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டின் ஆரம்பத்தில் ஜனவரி 1-ம்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7150 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், உலகளாவிய மற்றும் இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு (குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் போது), மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் போக்கு மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் நடக்கும் போர்கள் மற்றும் மோதல்கள் பொருளாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாக கருதி வாங்குகின்றனர்.
ஒருபுறம் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் தங்கத்திற்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் நாடு முழுவதும் அதிகளவில் திருட்டு சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. கஷ்டப்பட்டு சிறுகசிறுக சேர்த்து வைத்து வாங்கிய தங்க நகையை திருடர்களிடம் இருந்து பாதுகாப்பது தற்போது மக்களுக்கு பெரும்பாடாகவே உள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில் உங்களது தங்க நகை திருடு போய்விட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டலோ அதற்கு காப்பீடு தொகை பெற முடியும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் தங்க நகைகளை அணிந்து செல்லும் போது அல்லது பையில் எடுத்துச் செல்லும் போது திருட்டு அல்லது கொள்ளை சம்பவத்தில் தொலைத்துவிட்டீர்கள் என்றால் அந்த நகைக்கு நீங்கள் காப்பீடு தொகையை பெற முடியும். எப்படினு கேக்குறீங்களா, உங்களின் தங்க நகை தொலையும் பட்சத்தில், நீங்கள் வாங்கிய நகையின் பில் உங்களிடம் இருந்தால் காப்பீடு தொகையை பெற முடியும். அதற்கு முன் நகை வாங்கிய பில்லில் நீங்கள் வாங்கிய தங்க நகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் நகை வாங்கிய நகைக்கடைக்காரரிடம் கேட்டு சரிபார்க்கவும்.
அப்படி நீங்கள் வாங்கிய நகைக்கு அந்த நகைக்கடையில் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக நீங்கள் இழந்த நகைக்கு இழப்பீடு தொகையை பெற முடியும். இந்தியாவில் பல நகைக்கடைக்காரர்கள் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்பீட்டு சலுகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பெரிய நகைக்கடைகள் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகளுடன் சேர்த்து Gold insuranceக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சலுகை நீங்கள் நகை வாங்கிய நாளில் இருந்து ஒரு வருடம் வரை வழங்கப்படுகிறது.
PC Jewellers, ORRA, Kalyan Jewellers, Malabar Gold & Diamonds, PNG Jewellers போன்ற நகைக்கடைக்காரர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை வழங்கி வருகின்றன. நீங்கள் நகை வாங்கி ஒரு வருடத்திற்குள் உங்கள் நகை திருடு போய்விட்டாலோ அல்லது ஏதாவது சேதம் ஆகிவிட்டாலோ நீங்கள் தொலைந்த நகைக்கு தங்க காப்பீட்டு தொகை கோர (gold insurance claim) உங்களுக்கு முழு உரிமை உள்ளது.
கலவரம், பூகம்பம், வெள்ளம் அல்லது புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும் திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளின் போதும் உங்களுடைய தங்க நகைகள் சேதம் அல்லது இழப்பு ஏற்படும் அபாயத்தை இந்த காப்பீட்டுத் தொகை உறுதி செய்கிறது.
அதேபோல் உங்களுடைய தங்க நகை திருட்டு போய்விட்டால் போலீசில் புகார் அளித்து FIR காப்பி மற்றும் நகை வாங்கிய பில்லையும் எடுத்து கொண்டு நீங்கள் நகை வாங்கிய கடைக்கு சென்று தங்க நகை காப்பீடு தொலையை கோரலாம்.