

இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில்கள். தொலைதூரம் என்றாலும் சரி.. உள்ளூர் போக்குவரத்து என்றாலும் சரி.. ரெயில்கள் இருந்தால் அதில் பயணிப்பதே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும். அந்தவகையில், இந்தியாவில் ரெயில் பயணம் பாதுகாப்பானது, விலை மலிவானது மற்றும் சௌகரியமானது. அதாவது பேருந்து மற்றும் விமான சேவைகளை விட ரெயில் கட்டணம் குறைவு, அதே சமயம் நீண்ட தூர பயணங்களுக்கு சௌகரியமானது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
ரெயிலில் பயணம் செய்வதன் மூலம், உங்கள் பட்ஜெட்டை மீறாமல் அதிக தூரத்தை கடக்க முடியும். நீண்ட தூர பயணத்தின்போது அலுப்பு,சோர்வு, உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரெயில்கள் தான் சரியான தேர்வு.
ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.
குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ரெயில்களில் மிடில் பெர்த்தை (Middle Berth) முன்பதிவு செய்யும் பயணிகள் அந்த படுக்கையில் எப்போது தூங்க வேண்டும் என்பது குறித்து தகவலை ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய ரெயில்வேயில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் கீழ் படுக்கையை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். மேல் படுக்கையை இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். மிடில் பெர்த்தை (நடுப்படுக்கை) அனைத்து வகை மக்களும் உபயோகப்படுத்துகின்றனர்.
சமீபகாலமாக ஓடும் ரெயில்களில் தூங்குவதற்கு மிடில் பெர்த்தை பயன்படுத்தும் பயணிகளால் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்வதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த ரெயில்வே வாரியம் இதுபோன்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பயணிகள் இருக்கை தொடர்பாக ஏற்கனவே விதிமுறையை உருவாக்கியுள்ளது. அந்த விதிமுறையில் பயணிகள் படுக்கைகளை எப்போது பயன்படுத்தலாம்? என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து பல பயணிகளுக்கு தெரிவதே இல்லை. அதன் விவரம் பின்வருமாறு..
முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில் மிடில் பெர்த் பயன்படுத்தும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் உறங்குவதற்கு பயன்படுத்தலாம்.
மற்ற நேரங்களில் (காலை 6 - இரவு 10) நடுப்படுக்கையை மடக்கி வைத்து, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கீழ் படுக்கை பயணிகளுக்கு அமரும் வசதி செய்து தர வேண்டும்.
இந்த விதிமுறை பயணிகளிடையே மோதலைத் தவிர்க்க ரெயில்வேயால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதியில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தூங்க விரும்பினால் அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் கீழ் இருக்கையில் உள்ள சக பயணியின் ஒப்புதல் அளித்தால் நேர வரம்பை நீட்டித்து கொள்ளலாம்.
சில பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூங்க முயலும்போது பயணிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதற்கு தீர்வு அளிப்பார்கள். இதேபோல் மேல் படுக்கையில் தூங்குவதற்கு எந்த நேர வரம்பும் கிடையாது. ஆனால் நடுப்படுக்கையை முன்பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக ரெயில்வே விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- ரெயில் படுக்கையை பயன்படுத்துவது குறித்த இந்த விதிமுறைகளை முறையாக தெரிந்து கொண்டு பயணிகள் ரெயிலில் அமைதியான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே சார்பில் சமூக வளைத்தள பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.