
விமானத் துறையில் இந்தியா புதிய உயரத்தை எட்டி வருகிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணம் தற்போது நடுத்தர வர்க்கதினர் முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தியாவில் விமான பயண நடைமுறைகள் எளிமையாக்கி உள்ளது. ஏர் இந்தியா, இன்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளுக்கு இடையேயும், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் விமான போக்குவரத்து சேவை அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவி மும்பை, சென்னை, உத்தர பிரதேச மாநிலம் ஜேவார் ஆகிய விமான நிலையங்களில் இருந்து கூடுதலாக விமான சேவை வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படவுள்ளது.
இந்தியா விமான துறையில் அரிய சாதனை படைக்க உள்ளது. நவிமும்பை விமான நிலையமும், ஜேவார் விமான நிலையமும் மும்முரமாக கட்டப்பட்டு வருகின்றன. இதே போல இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து ஏராளமான விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்க மத்திய விமான அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களுக்கு மஸ்கட்டில் இருந்து விரைவில் நேரடி விமான சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விமானத்தில் பயணத்தின் போது பயணம் மேற்கொள்பவர் பல்வேறு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் அது பல அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து ‘போர்டிங் பாஸ்' பெறுவதற்காக கால்கடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியது இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, காகிதம் இல்லா செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விமான போக்குவரத்து அமைச்சகம் ‘டிஜி யாத்ரா' என்ற செயலியை கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
பயணிகள் இதை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் தனிநபர் மற்றும் உடைமை சோதனைகளை தவிர விமான நிலைய நுழைவுவாயில் முதல் விமானத்தின் உள்ளே ஏறி அமருவது வரையிலும் வரிசையில் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவாக செல்ல முடியும்.
‘டிஜி யாத்ரா' செயலியின் சேவை சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 24 விமான நிலையங்களில் உள்ளன. இந்த செயலியை 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலமாக 6 கோடி பேர் தங்களது பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்துள்ள நவிமும்பை, நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள மேலும் 17 விமான நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘டிஜி யாத்ரா' செயலியின் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ‘டிஜி யாத்ரா' செயலி வசதி உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 41-ஐ எட்டும்.
இந்தியர்கள் மட்டுமே தற்போது இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ‘டிஜி யாத்ரா' செயலியில் மின்னணு-பாஸ்போர்ட்டை பதிவு செய்து சோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் வெளிநாட்டினரும் தங்களது மின்னணு-பாஸ்போர்ட்டில் சுயவிவரங்கள் அடங்கிய உள்ளீடுகளை கொடுத்து, உள்நாட்டுக்குள்ளான விமான பயணத்துக்கு ‘டிஜி யாத்ரா' செயலியை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.