"திரைக்கதை மன்னன்" கே.பாக்யராஜ் காலமானார்..!

Bhagyaraj
Bhagyaraj
Updated on

நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில் மிகையற்ற யதார்த்த காட்சிகளை திரையில் கொண்டு வந்து மக்களைக் கவர்ந்து திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர்.

சமீபத்தில் அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த நிலையில் தற்போது இவரது மறைவு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Bhagyaraj
Bhagyaraj

அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது . 70 வயதை தாண்டிய நிலையில் வயது காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்தார். இந்த நிலையில் தான் தற்போது கே.பாக்கியராஜ் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியும் வந்துள்ளது.

பாக்யராஜின் கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும் . குறிப்பாக யாரும் சொல்லாத ஆண் பெண் சார்ந்த நுண்ணிய உணர்வுகளை தனது படங்களில் புகுத்துவது பாக்யராஜ் தனது பாணியாகவே கொண்டிருந்தார். அவரது தனித்துவமான கதை சொல்லும் முறை மற்றும் சிறு நிகழ்வையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும் அவரை பல இளம் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக்கியது. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களைப் பார்த்து அறிந்து கொண்டவர்கள் பலருண்டு.

வாயைப் பிளக்க வைக்கும் பிரம்மாண்டங்கள் இல்லாமல் நமது சிந்தனையைக் கிளறியது இவரது படங்கள் என்றால் மிகையாகாது. நாம் பார்க்கும் நபர்களை வைத்து பக்கத்து வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து அதே இடத்தில் நாமும் ரசிப்பது போன்ற உணர்வைத் தருவதில் கெட்டிக்காரர். சாதாரண கதைகளிலும் அவர் வைக்கும் எதிர்பாராத திருப்பங்கள் சமூகத்தில் அவ்வப்போது புயலைக் கிளப்பியதுண்டு.

இதையும் படியுங்கள்:
கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!
Bhagyaraj

எம்ஜிஆரின் தீவிரமான ரசிகரான இவரது படத்தில் நிச்சயமாக எம்ஜிஆர் படத்தின் ஏதேனும் ஒரு மெசேஜ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களின் மனம் கவர்ந்த இயக்குனர் என்ற புகழாரம் சூட்டப்பட்டது இவருக்கு தான் எனலாம்.

நடிகை ஊர்வசியின் அறிமுகப்படுத்திய இவரது "முந்தானை முடிச்சு". திருமணமான ஆண் மற்றும் இளம் பெண்ணின் காதல் ஆகியவற்றை முடிச்சு போட்டு எவரும் சொல்லாத வகையில் காட்சிகளை விரசமின்றி எடுத்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.

வாழ்நாள் சாதனையாளர் முதல் பிலிம்பேர் வரை எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதராக அனைவரிடமும் பழகும் இவரது பண்பு எப்போதும் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

குருவான பாரதிராஜா கடந்த 10ம் தேதி மறைந்ததில் மனம் நொந்துப்போன பாக்யராஜ் அடுத்த 17 வது நாளில் காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாக்யராஜின் மறைவு செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனையைத் தந்துள்ளது.தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com