பாரதிராஜா குடும்பத்தில் வெடித்த சொத்து தகராறு : மகள்-மருமகள் இடையே பாகப்பிரிவினை பிரச்சினை..?

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், நீலாங்கரை பங்களா சொத்துக்காக வாரிசுகள் பொதுவெளியில் மோதிக்கொண்ட அதிர்ச்சி பின்னணி.
பாரதிராஜா குடும்பத்தில் வெடித்த சொத்துத் தகராறு
பாரதிராஜா குடும்பத்தில் வெடித்த சொத்துத் தகராறுimage source:oneindiatamil
Updated on

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மறைந்த வேதனை இன்னும் அவரது ரசிகர்கள் இடையே மறையாத நிலையில் அவரது மகள், மருமகள் (மகன் மனோஜின் மனைவி) மற்றும் பேத்திகள் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டுள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்தச் சொத்துப் பிரச்சினை பாரதிராஜாவின் இறுதிச் சடங்கின் போது பெரிதாக வெடித்ததன் மூலம் அங்கு கூடியிருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிருப்தியைத் தந்துள்ளது.

திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த மனோஜின் மனைவி நந்தனா மற்றும் அவரது மகள்களை, பாரதிராஜாவின் மகள் ஜனனி வெளியேற்ற முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதிராஜாவின் மகள் ஜனனி திருமணத்திற்கு பின் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மலேசியாவில் செட்டிலாகி உள்ளார். மகன் மனோஜ் கேரள நடிகை நந்தனாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து சமீபத்தில் மறைந்தார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

சென்ற வருடம் மாரடைப்பால் இறந்த தனது செல்ல மகன் மனோஜின் மறைவுக்குப் பின் பாரதிராஜா விரக்தியின் உச்சத்தில் இருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் மகன் மனோஜ் மறைவுக்குப் பிறகு, அவரது பெயரிலோ அல்லது அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரிலோ சொத்தை எழுதி வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சொத்துகளுக்கு மகளும் உரிமை கோரிய நிலையில் மருமகள் மற்றும் அவருக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பாரதிராஜா மற்றும் சொத்துரிமை தொடர்பான பிரச்சினையே இறுதி நிகழ்வில் இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

மேலும் எத்தனையோ கலைஞர்கள் புகழுக்கு அடித்தளமாக இருந்த பாரதிராஜா தன் மகன் மனோஜை திரைத்துறையில் பெரிய அளவில் வரவைக்க முடியவில்லை எனும் வேதனையில் இருந்த பாரதிராஜா மனோஜின் திடீர் மறைவிற்கு பிறகு மிகவும் தளர்ந்து போனார்.

இந்நிலையில் ஏதோவொரு காரணத்தால் மனைவி தேனி போய்விட்ட நிலையில் மகளும் மலேசியாவில் இருக்க மருமகளும் உடனில்லாமல் தனியே வசித்து வந்ததால் அவர் தனிமையில் வீழ்த்ததாக சொல்லப்படுகிறது.இடையில் உடல் நலம் குன்றிய பாரதிராஜாவை கவனித்து கொள்ள அவரது மகள் அவர் வசித்து வந்த நீலாங்கரை பங்களாவில் நர்சுகள் மற்றும் பணியாட்களை நியமித்திருந்ததாகவும் அவ்வப்போது மருமகள் மற்றும் பேத்திகள் வந்து பார்த்து செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பாரதிராஜா மரணத்திற்கு பிறகு அவரை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தான் இந்த மோதல்கள் நடந்தேறி உள்ளது.

மருமகள் நந்தனாவையும் பேத்திகளையும் பாரதிராஜாவின் மகள் ஜனனி இறுதி நிகழ்வில் பங்கேற்கவிடாது , அமர்ந்திருந்த நந்தனாவின் கைகளை முறுக்கி எழுப்பி விட்டதாகவும் அதைக் கண்டு நந்தனாவின் மகள்கள் அழுதபடி நிற்க அப்போது அங்கிருந்த நடிகை ராதிகா ஓடி வந்து இரு தரப்பிடமும் கைகளை கூப்பி மன்றாடி பிரச்னை பெரிதாகாமல் தடுத்ததாகவும் காணொளிகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தனது பெயரில் பாரதிராஜா வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நந்தனாவை காலி செய்யுமாறு ஜனனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த விஷயத்தைக் காணும் போது உலகத்துக்கே காதல், பெண் முன்னேற்றம், பெண் சொத்துரிமை, சாதி மறுப்பு என்று பாடம் எடுத்த பலரது குடும்பங்களிலும் கூட, இறுதியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான் என்பது நிரூபணமாகியுள்ளது. இதே சிக்கல்தான் தற்போது பாரதிராஜாவின் பெருமையையும் அசைத்துப் பார்க்கிறது

பாரதிராஜாவின் குடும்பப் பிரச்சினையில் மூன்றாம் நபர் நுழையும் உரிமை இல்லை எனினும் பொதுவெளியில் இவர்கள் பிரச்சினை வந்து விட்டதால் பல்வேறு விமர்சனங்கள் தற்போது இணையதளங்களில் வலம் வருகிறது.

பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு கணவரை காண வந்த அவரது மனைவியை அவரைத் தனிமையில் விட்டுச் சென்றது நியாயமா என ஆவேசத்துடன் கேட்ட கங்கை அமரனின் காணொளி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.கலை உலகம் "லெஜண்ட்" என்று ஆராதித்த மனிதனின் இறுதி அத்தியாயத்தை அவருடைய வாரிசுகள் நீதிமன்றம், காவல் நிலையம், சொத்து ஆவணங்கள் என்று முடித்து விடுவார்கள் போல என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாசப்பிணைப்பை காட்சிகளில் வடித்து எண்ணற்ற குடும்பங்களை இணைத்து வைத்த மாபெரும் கலைஞர் பாரதிராஜாவின் பாசமற்ற வாரிசுகளின் செயல் அவரது புகழுக்கு ஏற்படும் களங்கமாகவே அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதே நேரம் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திலேயே அவற்றின் உரிமையாளர் இவர் என உயில் எழுதி வைத்து விடுவதுதான் பின்னாளில் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் உறவுகளை நீடிக்க செய்யும் என்று பலரும் கருத வழிவகுத்து விட்டது இந்த நிகழ்வு.

இதையும் படியுங்கள்:
மயில் முதல் கருத்தம்மா வரை; பாஞ்சாலி முதல் ஜெனிபர் டீச்சர் வரை - பாரதிராஜா படைத்த பெண் பாத்திரங்கள்
பாரதிராஜா குடும்பத்தில் வெடித்த சொத்துத் தகராறு
logo
Kalki Online
kalkionline.com