தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.06.2024 தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தென்மேற்குப் பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர், இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பாக அல்லது இயல்பை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்தார். குறுகிய காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை அவ்வப்போது ஏற்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் மற்ற துறைகளின் ஆயத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள், தென்மேற்குப் பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள்:
பேரிடர் காலங்களில், பிரத்யேகமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
காவல் துறையில், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றுள்ள காவல் துறை அலுவலர்கள் கண்டறியப்பட்டு, பேரிடர் காலங்களில் அவர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெருநகர சென்னை காவல் பிரிவில் பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் பணிகளை மேற்கொள்ள பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ளும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினை தேவையான இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ள நீர் தேங்கும் நேர்வுகளில் பாதிப்பிற்குள்ளாகும் முக்கியம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்களையும், மின்சார கட்டமைப்புகளையும் உயராமான இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில், நிவாரணப் பணிகளுக்காகவும் மற்றும் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பெட்ரோல் / டீசல் கிடைக்கப் பெறும் வகையில், வாகனங்கள் மூலம் எரிபொருள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அதே போன்று, பேரிடர் காலங்களில் தடையில்லா செல்பேசி இணைப்பை ஏற்படுத்த செல்பேசி கோபுரங்களுடனான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒரு நிலையான வழிகாட்டு நடைமுறையினை தயார் செய்து வெளியிட வேண்டும். அதே போன்று, பாதிப்பிற்குள்ளாகும் பலதரப்பட்ட மக்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பேரிடர் எச்சரிக்கையினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் காலங்களில் ஒவ்வொரு துறையினரும் அவரவர் துறை சார்ந்த பயனர்களுக்கு வழங்க வேண்டிய தாக்கம் சார்ந்த முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டு நடைமுறையினை வெளியிட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பேரிடர் அனுபவங்களை கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும், தன்னார்வலர்களைக் கண்டறிந்து, அவர்களை பேரிடர் காலங்களில் ஈடுபடுத்தும் வகையில், உரிய பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், காவல் துறை, இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புபடை, உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்களும், தொலைத்தொடர்பு துறை, எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.