

வங்கக்கடலில் உருவான 'டித்வா' புயல், சீற்றத்துடன் தமிழகக் கரையை நோக்கி நெருங்கி வருகிறது. அதன் நகர்வு அதிகரித்துள்ளது; கடல் சீற்றம் உச்சம் தொட்டுள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு இயந்திரம் போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்:
தமிழகத்துக்கு 'அதி கனமழை'க்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
புயல் கரையை கடக்கும் வரை அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். புயல் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக உள்ளது.
புயலின் தற்போதைய நிலை
'டித்வா' புயல் தற்போது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி அதிகாலைக்குள் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மிக அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தப் புயல் சென்னையிலிருந்து சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புயல் நகரும் வேகம் தற்போது மணிக்கு 10 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
வானிலை எச்சரிக்கை மற்றும் தாக்கம்
'டித்வா' புயலின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் தீவிரமடைந்துள்ளது. புயலின் தாக்கத்தினால் ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கடுமையாக எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் தீவிரத்தின் காரணமாக, காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு, அபாய நிலை குறித்து மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை நெருங்கும் போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.