

ஆதாரபூர்வமான ஆதாரங்கள் இல்லாமல், கணவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது என்பதைக் கவனித்த மும்பை உயர்நீதிமன்றம், கொடுமையின் அடிப்படையில் ஒரு ஆணுக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்கிய நாசிக் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
1955-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ், மே மாதம், 2025-ம் ஆண்டு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி விவாகரத்து கோரி நாசிக் குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது கணவர், தனது மனைவி தன்னிடம் வாட்ஸ்-அப் மூலம் தனிக்குடித்தனம் வர கோரி வற்புறுத்தியாதாகவும், தனது தாய் மற்றும் சகோதரியை அவதூறாக பேசியதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான சில வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்திருந்தார்.
இதனை ஏற்ற நாசிக் குடும்பநல கோர்ட்டு, கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் வாட்ஸ்-அப் உரையாடல்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அதாவது, அந்தப் பெண் ‘கணவன் மற்றும் மாமியார் மீது கொடூரமான, மிதமிஞ்சிய வார்த்தைகள், உணர்ச்சிவசப்பட்ட அச்சுறுத்தல்களை பயன்படுத்தி கணவன் குடும்பத்தாரை மனரீதியாக கொடுமைப்படுத்தினார் என்றும் அத்தகைய அச்சுறுத்தல் தரும் மனைவியுடன், அந்த கணவன் வாழமுடியாது. எனவே, மனுதாரருக்கு விவாகரத்து செய்ய உரிமை உண்டு’ என்று குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், குடும்ப நல கோர்ட்டில் எனது வாதத்தை வைக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
அந்தப் பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுபம் சேன், மனைவி கொடுமைப்படுத்துவதை நிரூபிக்க கணவர் சமர்பித்த வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் மட்டுமே குடும்ப நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதி டாங்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, குடும்பநல கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தவிட்டது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது, கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாட்ஸ்-அப் ஆதராங்களை மறுப்பதற்கோ அல்லது அதுகுறித்து விளக்கமளிப்பதற்கோ மனைவிக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. முறையாக சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்படாமல், வெறும் வாட்ஸ்-அப் உரையாடல்களை மட்டும் அடிப்படையாக கொண்டு விவாகரத்து வழங்க முடியாது.
மேலும் இந்த வழக்கின் அனைத்து பிரச்சினைகளையும் ஆதாரங்கள் மூலம் தீர்மானித்து, இருதரப்பு வாதங்களையும் மீண்டும் நாசிக் குடும்பநல கோர்ட்டே விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில், பிரிந்து வாழும் தம்பதியினர் மத்தியஸ்தம் மூலம் சமரசம் செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்குமாறு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.