
‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்ற நிலைமை என்றோ மாறிவிட்டது. பெண்களுக்கு இன்று நல்ல கல்வி கிடைத்துவிட்டது. அந்தக் கல்வியின் மூலம் அவர்களும் கணவனைப் போலவே சம்பாதிக்கிறார்கள். பெண்களும் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது கட்டாயமாகி விட்டது. இத்தகைய தருணத்தில் தற்போது இளம் தம்பதியரிடையே விவாகரத்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் திருமணமாகி இரண்டு வருடத்திற்குள் பெண் கர்ப்பமாகி விடுவாள். ஆனால், இப்போதோ இரண்டு வருடத்திற்குள் முட்டி கொண்டு கோர்ட்டில் விவாகரத்திற்கு முன்வருகிறார்கள். நாளுக்கு நாள் விவாகரத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனால் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர்களும், செய்து கொள்வதற்கு பிள்ளைகளும் மிகவும் யோசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை தொடர்ந்துகொண்டே போனால் நாளடைவில் நம்முடைய சந்ததிகள் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். இந்த விவாகரத்து அதிகமாவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் பார்க்கலாமா?
1. இருவரும் சம்பாதிக்கும்போது, காலையில் அரக்கப் பறக்க எழுந்திருக்க வேண்டும். சமைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும். ஆபீஸ் கிளம்ப வேண்டும். அலுவலகம் முடிந்து மாலை வந்தவுடன் மனம் விட்டுப் பேச, அன்றைக்கு நடந்த விஷயங்களைப் பற்றி பேச, உறவுகளைப் பற்றி பேச, அன்பைப் பரிமாறிக்கொள்ள உடலில் தெம்பு இருப்பதில்லை. இருப்பதை தின்று விட்டு உறங்க வேண்டும். தாம்பத்தியம் என்பது அறவே நீங்கி ஒரு இயந்திர வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் இன்றைய சூழ்நிலை. ஆனால், கணவர் எந்தவித வேலையும் செய்ய உதவி புரியாமல் இருக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நானும் சம்பாதிக்கிறேன், எனக்கும் வேலை டென்ஷன், உடம்பு அசதி எல்லாமே இருக்கிறது, உங்களால் உதவி செய்ய முடியாதென்றால் என்னாலும் செய்ய முடியாது என்று மனைவி பதில் கூற பிரச்னை உருவாகிறது.
தீர்வு: ஆண் பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் ஆரம்பத்திலியே இதை பற்றியெல்லாம் எடுத்துரைக்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும் மனைவிக்கு உதவும் வகையில் சிறிய சிறிய வேலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் பிள்ளைகளும் சிறிய சிறிய வேலைகளை செய்து கொடுத்தால் பெண்களுக்கு சிறிது பாரம் குறையும். ஒரு நாள் மனைவி காப்பி போட்டால் அடுத்த நாள் கணவர் போடலாம். வேலைப் பளுவை இருவரும் சேர்ந்து சுமக்கும்போது நிலைமை சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும்.
2. இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் விவாகரத்திற்கு முக்கியமான காரணம் மலட்டுத் தன்மை. ஆண், பெண் இருபாலருக்குமே இந்த பிரச்னை மிக அதிகமாக இருக்கிறது. இருபாலருமே ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றாமல் நாகரிகம் என்ற பெயரில் சிறு வயதிலேயே குடி, சிகரெட் போன்றவற்றை எல்லாம் அருந்தி உடலைக் கெடுத்து கொள்கிறார்கள். வாலிப வயதிலேயே நீரிழிவு நோய் வந்து பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் அதிக எடையின் காரணமாக pcod, thyroid போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகுகிறாராகள். இக்காரணத்தால் மலட்டுதன்மை ஏற்படுகிறது. திருமணததிற்கு பிறகுதான் விஷயம் வெளியே தெரிகிறது. கடைசியில் பிளவு உண்டாகிறது.
தீர்வு: ஆண் பிள்ளையாக இருந்தாலும், பெண் பிள்ளையாக இருந்தாலும், பெற்றோர்கள் திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்கு முன்பே அவர்களை ஒருமுறை கண்டிப்பாக மருத்துவரிடம் கொண்டு சென்று முழு பரிசோதனை செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் அதை முழுவதுமாக சரி செய்த பின்னரே திருமணத்திற்கு முயற்சி செய்ய வேண்டும். இருபாலரும் வரன் தேட ஆரம்பித்தவுடனேயே எல்லாவிதமான கெட்ட வழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதை எல்லாம் செய்த பிறகும் ஒரு வேளை குழந்தை பிறப்பதில் பிரச்னை இருந்தால் IVF போன்ற நவீன முறைகளை முயற்சி செய்யலாம்.
3. அடுத்து இன்னொரு மிக முக்கிய காரணம் extra marital affair. முன்பெல்லாம் இது ஆண்களிடம் மட்டும்தான் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் பெண்களிடமும் இது காணப்படுகிறது. இந்தக் காரணத்தால் வெறும் விவாகரத்து மட்டும் நடப்பதில்லை, கொலைகளும் கூட நடைபெறுகின்றன. இந்த காரணத்தினாலும் நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளவே பயப்படுகிறார்கள். இந்த extra marital affair இப்போது மிகவும் பொதுவான ஒன்றாகி விட்டது.
தீர்வு: கல்யாணத்திற்கு முன்னால் இருபாலரும் யாருடனாவது காதல் கொண்டிருந்தால் தயவு செய்து பெற்றோர்களுக்கு தெரிவித்து அந்த நபரையே திருமணம் செய்து கொள்ளவும். கல்யாணத்திற்கு பிறகு தைரியமாக இன்னொரு தொடர்பில் இருக்கும் உங்களுக்கு கல்யாணத்திற்கு முன்பே பெற்றோர்களிடம் சொல்வதற்கு தைரியம் இல்லையா? ஏன் நீங்களே உங்கள் வாழ்க்கையையும் அடுத்தவர்களுடைய வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறீர்கள். பெற்றோர்களும் அவர்கள் யாரையாவது விரும்புகிறேன் என்று சொன்னால் அதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் மறுத்து கட்டாயப்படுத்தி வேறு ஒருவரோடு திருமணம் செய்வதால் இரண்டு பேருடைய வாழ்க்கையும் நாசமாகிறது.
4. இன்னொரு காரணம் என்னவென்றால், இருவரும் சம்பாதிக்கும் காரணத்தால் சரியான திட்டம் திட்டாமல் தன் இஷ்டத்திறகு செலவு செய்து விட்டு பிறகு அதனால் வரும் மோதலாகும். கணவன் கண்டபடி செலவு செய்தால், மனைவியும் ‘என் பணம்தானே, நானும் அழிக்கிறேன்’ என்று ஏட்டிக்கு போட்டியாக நடந்தால் என்ன ஆகும்? அக்கௌண்டில் பேலன்ஸ் குறைந்து போகும். பிறகு வாக்குவாதத்தில் தொடங்கி, அதுவே முற்றி உடனே கோர்ட் வாசலுக்கு சென்று விடுகிறார்கள்.
தீர்வு: இருவரும் ஒன்றாக உட்கார்ந்து மாத செலவுகளை எழுதி சரியான கணக்கு வழக்குகளுக்கான திட்டத்தை தீட்ட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வெளியே செல்லும் வழக்கத்தை வைத்து கொள்ளலாம். அளவுக்கு மீறி செலவு செய்வதைத் தவிர்த்து ஒரு நிலையான பொருளாதாரத்தை கடைபிடிக்க முயற்சிக்கவும். ஏதாவது ஒரு வழியில் சேமிப்பு செய்யவும். இருவருமே அனாவசியமான செலவுகளை தவிர்த்தால் மட்டுமே பொருளாதார நிலை சீராக இருக்கும். ஒருவர் மட்டுமே சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்க முடியாது. இரண்டு பேருக்குமே என் குடும்பம், என் மனைவி என் கணவர் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
5. கடைசியான காரணம் ஈகோ. ஆண்களுக்கு பொதுவாகவே ஈகோ இருக்கும். மனைவி தனக்கு நிகராக சம்பாதிக்கும்போது சில ஆண்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் இந்த ஈகோ இன்னும் அதிகமாகிறது. இப்பவும் சில இள வயதினர் தான் சொல்வதைதான் மனைவி கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? இதனால் பிரச்னை ஆரம்பமாகி நாளுக்கு நாள் சண்டை சச்சரவுதான் அதிகமாகிறது.
ஐம்பது வயதைத் தாண்டியும் இன்னமும் நிறைய பெண்கள் ஆண்களுக்கு அடிமையாகத்தான் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் சம்பாதிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் புருஷனிடம் கையேந்தும் நிலைமை. இன்றைய பெண்களோ கை நிறைய சம்பாதிக்கும்போது அவர்கள் எப்படி அடிமையாக இருப்பார்கள். ஆனால், ஒரு சில பெண்கள் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு ஈகோ மனப்பான்மையோடு கணவனை மதிப்பதில்லை. ஆகவே, இருபாலரிடமும் இந்த ஈகோ தலைவிரித்தாடுகிறது.
தீர்வு: இருவரும் ஒருவருக்கொருவரை அனுசரித்து, மரியாதை கொடுத்து, விட்டு கொடுத்துப் போக வேண்டும். இருவருமே சமம் என்ற எண்ணம் மனதில் வர வேண்டும். மனைவிக்கு பதவி உயர்வோ சம்பள உயர்வோ கிடைத்தால் கணவன் அவளைப் பாராட்ட வேண்டும். மனைவியும் கணவனை பாராட்ட வேண்டும். சந்தேகப் பேயும் ஈகோ பேயும் இருவருக்கும் நடுவில் நுழையாதபடிக்கு நடந்து கொள்ள வேண்டும்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இரண்டு கைகளையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். ஒருவர் மட்டுமே ஒத்துழைத்தால் அது இக்காலத்தில் செயல்படாது. இருவரும் வேலைக்கு போகத்தான் வேண்டும். அதேப்போல் இருவருமே சேர்ந்துதான் வேலைகளையும் இன்ப, துன்பங்களையும் பகிர்ந்து கொண்டால்தான் இல்லறம் கோயிலாக இருக்கும். இல்லை என்றால் அது கல்லறையாக மாறி விடும். ஆகவே, ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பணத்தையும் உறவையும் சமமாக மதியுங்கள். வெறும் உறவை வளர்ப்பதாலோ அல்லது பணத்தை சம்பாதித்தாலோ ஒரு பிரயோஜனமுமில்லை!