ஐந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமர் ஜென்ம பூமியில் கட்டப்பட்ட இராமர் கோயிலில் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்பட்டது. மிக பிரமாண்ட முறையில் நடைபெற்ற அந்த விழாவில் கோயிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை செய்யப்பட்டது.
தற்போது புதிதாக கட்டப்பட்ட இராமர் கோயிலில் முதல் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஶ்ரீராமர் இலங்கை வேந்தன் இராவணனை கொன்றொழித்து தர்மத்தினை நிலை நாட்டி, சீதா தேவியுடன் இணைந்து அயோத்தி திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராண கதை ஒன்று உண்டு. அந்நாளில் இராமருக்கு பட்டாபிஷேகமும் செய்யப்பட்டது. இப்படி தீபாவளி அயோத்தி மக்களுக்கு சிறப்பு வாய்ந்தது .
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பின் அயோத்தியில் ராமர் கோயில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியது. அம்மாநில முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதையொட்டி, தீபோத்ஸவம், லேசர் லைட் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
சரயு நதிக்கரை முழுவதும், லட்சக்கணக்கில் தீப விளக்கேற்றும் தீபோத்ஸவம் நடந்தது. கடந்த முறை நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியாக, நேற்று மாலை முதலே நதிக்கரையோரம் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் 55 படித்துறைகளில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. விளக்கேற்றும் நிகழ்ச்சியில், கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் கொண்ட குழு டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உபியின் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் மாசுபாட்டை ஏற்படுத்தாத வகையில் 1,50,000 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன. உத்தரபிரதேசத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சரயு நதிக்கரையில் ஒரே நேரத்தில் 1,121 புரோகிதர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் மற்றொரு கின்னஸ் உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல, மாநில தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த லேசர் ஒளி ஒலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
உபியை சேர்ந்த கலைஞர்களால் ஶ்ரீ ராம் லீலா நாடகம் நடத்தப்பட்டது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளின் பாரம்பரிய ராமாயண கதைப்படி கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின. மேலும் 16 மாநில இந்தியக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ராமர் கோயிலில் தீபாவளி கொண்டாட்டம் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,
"அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோயிலில் ராம் லல்லா நிறுவப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தீபாவளி. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, எண்ணற்ற தியாகங்கள் மற்றும் ராம பக்தர்களின் தொடர்ச்சியான தவத்திற்குப் பிறகு இந்த மங்களகரமான தருணம் வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் சாட்சிகளாக நாம் அனைவரும் மாறியிருப்பது நமது அதிர்ஷ்டம். ஸ்ரீராமரின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள், வளர்ந்த இந்தியா என்ற உறுதியை அடைவதில் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."
என புதன் கிழமை அன்று தனது X தளத்தில் தெரிவித்திருந்தார்.