
இந்த வருடம் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை. ஆனால் இப்போதே களை கட்டத் துவங்கிவிட்டது சிங்கப்பூர். அதற்குக் கட்டியம் கூறும் வகையில் சிங்கப்பூரில் பிர்ச் சாலையில் தீபாவளிச் சந்தை கோலாகலமாகத் துவக்கியது. இந்தச் சந்தையில் புத்தாடைகள், பட்டாசு ரகங்கள், இனிப்பு வகைகள், உணவு ஐட்டங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என மக்களைக் கவரும்விதமான பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர் தமிழர்கள் தீபாவளி பர்சேஸ்களை இன்னும் முழு வீச்சில் ஆரம்பிக்காவிட்டாலும், இந்த தீபாவளிச் சந்தைக்கு குடும்பத்துடன் வந்து, தினுசு, தினுசான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அந்த ஏரியா முழுக்க கடைக்குக் கடை தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கின்றன. வண்ண விளக்குகளின் அலங்காரம் அபாரம்.
வாடிக்கையாளர்களைத் தங்கள் கடைக்கு இழுக்க மிகவும் வித்தியாசமான முறையில் ஸ்டால்களை அமைத்திருப்பதும், ஸ்டால்களுக்குப் பெயரிட்டிருப்பதையும் பார்க்கலாம். தமிழ்நாட்டு கிராமப்புற குடிசை போல தென்னங்கீற்றுகள் கொண்டு குடிசை அமைத்துள்ளனர். இங்கே கிடைக்கும் வித்தியாசமான சீஸ் பானிபூரிக்கு ஏக கிராக்கி. இவர்களுக்குப் போட்டியாக வேறு ஒரு கடையில், துபாய் சாக்லேட் பானி பூரி விற்கப்படுகிறது.
தி ஒரிஜினல் வடை என்று ஒரு கடை. அங்கே போனால், வழக்கமான மசால் வடை மட்டுமில்லாமல், பட்டர் சிக்கன் வடை, நண்டு வடை, காடைமுட்டை வடை, நெத்திலி மீன் வடை என்று விதம்விதமாக வடை சுட்டுத் தள்ளுகிறார்கள். இந்தக் கடை சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் சீனர்கள் மத்தியிலும் பிரபலமான 25 வருட பாரம்பரிய கடை.
இது ஒரு பக்கம் என்றால், லிட்டில் இந்தியா பகுதியில் ஆண்டுதோறும் தீபாவளிக் கொண்டாட்டம் கனஜோராக இருக்கும். அந்தப் பகுதியில் நவம்பர் 9ஆம் தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு பிரம்மாண்டமான முறையில் வண்ண விளக்குகள் ஒளிரும். இந்தப் பகுதியைச் சேர்ந்த 60 சமூக அமைப்புகள் இனைந்து இந்தக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் இந்த ஆண்டு சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் காரணமாக ஆறு லட்சம் எல் ஈ டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 42 அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக, இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்துக்கான கருப்பொருளாக “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சமயத்தில் இந்தியன் ஹெரிடேஜ் மையம் விழாக்கோலம் பூண்டு காணப்படும். இங்கே ஏராளமான பொழுபோக்கு, கலாசார அம்சங்களும், கடைகளும் இடம்பெறும். கிளி ஜோசியக்காரர்களையும் இங்கே பார்க்கலாம்.