
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 20-ம்தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. தொழில், வேலை, கல்வி என பல்வேறு தேவைகளுக்காக வெளியூரில் வசித்து வரும் பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு மற்றும் பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக பலரும் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். சொந்த ஊருக்கு நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
தெற்கு ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக சில விதிமுறைகளை விதித்துள்ளதுடன் ஆபத்தை விளைவிக்கும் சில பொருட்களை ரெயில்களில் கொண்டு செல்ல நிரந்தர தடை விதித்துள்ளது. அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என்ற தடை உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.
ஆனால், சில வியாபாரிகள் மற்றும் பயணிகள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு உள்பட ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு பொருட்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்துச்செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கும், ரெயிலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரெயில்வேயின் இந்த அறிவுரையை கேட்காமல் சில பயணிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சிலர் அதை பொருட்படுத்தாமல் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை ரெயிலில் எடுத்து செல்கின்றனர். இதனால் ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
இதனால் இந்தமுறை கடுமையான விதிமுறையை கொண்டு வந்துள்ள தெற்கு ரெயில்வே, ரெயிலில் தடை செய்யப்பட்ட பட்டாசு உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.