திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: 20 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை..!

DMK - DMDK ALLIANCE
DMK - DMDK ALLIANCE
Published on

சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகளின் கூட்டணி குறித்து மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் கருத்துகள் நிறைந்த வண்ணம் இருந்தது. கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தயாராகி வரும் நிலையில், தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து நீண்ட நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா 'பொறுத்திருந்து பாருங்கள் நல்ல முடிவு வரும்' என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் எந்த கூட்டணியில் இணைவார்கள் என்பது அனைவரிடமும் குழப்பத்தையே தந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் களத்தில் நிலவி வந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இன்று விடை கிடைத்துள்ளது. பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த பிரேமலதாவை, திமுக அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் வாசலில் நின்று வரவேற்றனர். பிரேமலதாவுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு முதலமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.

கூட்டணி அமைத்தபின் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசியபோது "தேதிமுக "எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் நிற்கும் என்பதை அண்ணன் முதலமைச்சர் ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.தொகுதி பங்கீடு குறித்து திமுக தேமுதிக குழுக்கள் ஆலோசிக்கும் .தேமுதிக ராஜ்ய சபா சீட் வழங்கும் என ஸ்டாலின் உறுதி தந்துள்ளார் . திமுக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2016ல் திமுக-தேமுதிக கூட்டணி அமையும் வாய்ப்பு கலைஞர் அய்யாவால் இருந்தது .ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மகன் அண்ணன் ஸ்டாலின் மூலம் திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியினரை கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுத்துள்ளோம். " என்றார்.

தேமுதிக-விற்கு ஐந்து அல்லது ஆறு தொகுதிகளில் சீட்டுகள் உறுதி என்ற நிலை என்ற தகவல் வந்துள்ளது. மேலும் மாநிலங்களவையில் தேமுதிகவிற்கு உறுப்பினர் பதவி உண்டு என்ற தகவலையும் உறுதி செய்துள்ளார் பிரேமலதா.இந்த கூட்டணி குறித்து அரசியல் வட்டாரங்களை பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. காரணம் இதன் மூலம் திமுக கூட்டணி மேலும் பலம் பெற்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக கடந்து வந்த தேர்தல் பாதை

2005-ல் கேப்டன் விஜயகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தேமுதிக, தனது 20 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 2011: அதிமுக கூட்டணி (சட்டப்பேரவை).

  • 2014: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.

  • 2016: மக்கள் நலக் கூட்டணி (தலைமைப் பொறுப்பு).

  • 2019: மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி.

  • 2021: அமமுக-வுடன் கூட்டணி.

  • 2024: அதிமுக-வுடன் கூட்டணி.

இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினாலும் தற்போது திமுகவுடன் இணைந்திருப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் வரவேற்கின்றனர்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள மதிமுக விசிக மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவதைப் போல ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக இணைந்துள்ளதால் தேமுதிகவிற்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் திமுக கூட்டணியில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பும் உள்ளது. தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதி பெயர்கள் இறுதியான பிறகு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு தேமுதிக தொகுதிகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது

இதையும் படியுங்கள்:
#JUST IN: தவெக-வில் தேசிய மற்றும் மாநில கட்சிகள்.! பரபரப்பைக் கிளப்பிய நாஞ்சில் சம்பத்.!
DMK - DMDK ALLIANCE

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com