

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில் தவெக தனது பலத்தை காட்ட முழுவீச்சுடன் ஆயத்தமாகி வருகிறது. இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இணையாத நிலையில், மூத்த அரசியல்வாதிகள் மட்டும் ஒருசிலர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தவெக கூட்டணியில் ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் இணைய போவதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்ச சம்பத் தெரிவித்துள்ளார். திமுக-விடம் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதால், இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்புகளும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு எங்களது உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதனையே தொண்டர்கள் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தவெக-வில் தேசிய கட்சி ஒன்று இணையப் போகிறது என பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போதைய சூழலில் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுகவில் கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் நினைப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஒருவேளை காங்கிரஸ் வெளியே வந்தால் தவெக-வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தவெக-வில் இரண்டு பெரிய கட்சிகள் இணையவுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்து இருப்பது, காங்கிரஸைத் தான் என பலரும் கருதுகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தவெக உடன் முன்னணி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. வெகு விரைவில் எங்கள் கூட்டணியில் ஒரு தேசியக் கட்சியும், ஒரு மாநில கட்சியும் இணையப் போகிறது. பேச்சுவார்த்தைகள் சுமுக முடிவை எட்டும் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என சிலர் பிதற்றுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. தலைமை என்பது பெறுவது அல்ல; தகுதியால் தானாக சேர வேண்டிய ஒன்று” என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
மாநில கட்சியான தேமுதிக மட்டும் தான் இன்னும் கூட்டணியில் சேரவில்லை. இந்நிலையில் நாஞ்சில் சம்பத் கருத்துப்படி, தவெக-வில் தேமுதிக இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை தவெக-வில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் இணைந்தால், அது விஜய்க்கு கூடுதல் பலமாகவே இருக்கும்.