
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து 3வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நுரையீரல் சளி பாதிப்பை சீர் செய்வதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு இயல்பாக மூச்சு விடுவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேமுதிக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.