ஒரே கூட்டணியில் திமுக - அதிமுக.! மீண்டும் புயலை கிளப்பிய அமைச்சர்.!

அமைச்சர் நிர்மல் குமார்
Dmk - Admk
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் திராவிட கட்சிகளை வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்வது இதுவே முதல்முறை.

தவெக அதிக இடங்களை வென்ற பிறகு, திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் வருங்காலத்தில் திமுக - அதிமுக கூட்டணி வைக்கும் என அடிக்கடி சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், திமுக - அதிமுக கூட்டணி குறித்தும் பேசினார்.

இதையும் படியுங்கள்:
எகிறிய தங்கத்துக்கு 'திடீர் பிரேக்': சவரனுக்கு ₹1,360 வீழ்ச்சி.!
அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “வருங்காலத்தில் திமுகவும், அதிமுகவும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்கள். தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. யாருக்கும் யாரையும் பழி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் சோதனை நடந்து வருகிறது.

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் தமிழக சட்டமன்றம் 7 மணி நேர முதல் 8 மணி நேரம் வரை நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சரி சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கோயில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை. முந்தைய அரசு செய்த தவறுகள் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். தவெக - காங்கிரஸ் இடையே எவ்வித முரண்பாடும் இல்லை. பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
இதையும் படியுங்கள்:
கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!!
அமைச்சர் நிர்மல் குமார்

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக தவெக தரப்பில் கூறப்பட்டது. இன்று வரையிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைப்பார்கள் என்று தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த கூட்டணியில் இணையும் என்பதே பெரும் புதிதாக இருக்கிறது.

வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய். இந்நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பே செப்டம்பர் 9-ம் தேதி கூட்டணி கட்சிக் கூட்டத்தை தவெக நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் வேட்பாளர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com