

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீட்டிற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இக்கூட்டணியில் அமமுகவிற்கு உத்தேசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்தொடர்ச்சியாக, ஆளும் கட்சியான திமுகவும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனான உடன்பாடுகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. இருப்பினும், தற்போதைய கூட்டணி கட்சிகள் அங்கேயே தொடர்கின்றன. இக்கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரஸ், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் கேட்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மற்றொருபுறம், காங்கிரஸின் ஒரு பிரிவினர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து, துணை முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என்று பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2021 சட்டசபை தேர்தலில் திமுகவின் மெகா கூட்டணியில் , திமுக 174 இடங்களில் போட்டியிட்டது , காங்கிரஸ் கட்சி 25 இடத்திலும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அதே அளவினான தொகுதிகளை ஒதுக்கினால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறது.பா.ம.க. ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.வும் தி.மு.க. கூட்டணியில் தான் கைகோர்க்கப்போவதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் , என்ற பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன் கூட்டணியில் தலைமை கட்சியான திமுக மீண்டும் அதே 174 இடங்களில் போட்டியிட நினைக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியில் புதிதாக மருத்துவர். ராமதாஸ் தலைமையிலான பாமக பிரிவுக்கும் இடங்கள் ஒதுக்க வேண்டியுள்ள காரணத்தினால் , திமுக 170 இடங்களில் போட்டியிட உள்ளது.
திமுக கூட்டணியில் முதல் ஆளாக கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி , தங்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. ஆனால் , திமுக 3 இடங்களை மட்டும் அவர்களுக்கு ஒதுக்க உள்ளதாக தெரிகிறது.
இதன்படி திமுக நேரடியாக 170 , காங்கிரஸ் 25 , விசிக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மநீம 3, தேமுதிக 6 மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட், பாமக (ராமதாஸ்)4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2 என தொகுதிகள் ஒதுக்கப்படும். தேர்தல் நேரத்தில் சேரும் கட்சிகளுக்காக 3 இடங்கள் வைத்துள்ளது அல்லது திமுகவே அந்த இடங்களில் கூடுதலாக போட்டியிடலாம்.
திமுக (நேரடியாக): 170
காங்கிரஸ்: 25
விசிக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக: தலா 6 (தேமுதிக-விற்கு ஒரு ராஜ்ய சபா சீட்)
பாமக (ராமதாஸ் அணி): 4
ஐயுஎம்எல்: 3
மமக: 2
தேர்தல் நேரத்தில் சேரும் கட்சிகளுக்காக 3 இடங்கள் வைத்துள்ளது அல்லது திமுகவே அந்த இடங்களில் கூடுதலாக போட்டியிடலாம்.
மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அது திமுகவின் 170 இடங்களில் வருகிறது , அதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1 என ஒதுக்கீடு செய்யப்படலாம். மதிமுகவிறகு 6 வரை ஒதுக்கப்பட உள்ளது, இதில் அந்தக் கட்சி , பாராளுமன்ற தேர்தலைப் போன்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா ? அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா? என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கூட்டணி பங்கீடு பற்றி இன்னும் திமுக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.