

அதிமுகவில் இருந்து , அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக இயங்கி வந்தார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமுமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட தொடங்கினார். ஆனாலும் ஓபிஎஸ் அணி அரசியல் ரீதியாக தனியாகவே செயல்பட்டு வந்தது.இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பொது இடங்களில் பலமுறை தினகரனை சந்தித்து தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்து வந்தார்.
அதிமுகவின் அதிகார மோதலில் ஓபிஎஸ் அணியும் சேர்ந்துக் கொண்டது. தமிழகத்தில் தேர்தல் ஜுரம் ஆரம்பித்த பிறகு , தொடர்ச்சியாக பல அதிசயத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. இதன் விளைவாக தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுப்பார்கள்? என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஓபிஎஸ் மற்றும் தினகரனுடன் சேர்ந்து முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் தேவர் ஜெயந்திக்கு சென்று வந்தது , அதிமுகவில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியால் செங்கோட்டையன் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் செங்கோட்டையன் விஜய் தலைவராக இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததிலிருந்து தினகரனையும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரையும் தங்களது கட்சி கூட்டணியில் சேர்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த பேச்சை உறுதிப்படுத்தும் வகையில் தினகரனும் பொதுவெளியில் பேசி வந்தார்.
இந்நிலையில் , சில தினங்களுக்கு முன் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரிய அளவில் காட்சிகள் மாறின. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் முதலில் திமுகவில் இணைந்தார். அதன் பின்னால் ஓபிஎஸ் உடன் இருந்த முக்கிய தலைவரான வைத்திலிங்கமும் திமுகவில் இணைய, பெரிய அளவில் அவரது பலம் குறைந்து போனது. இந்த அணியில் இருந்த குன்னம் ராமச்சந்திரன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
மறுபுறம் தினகரன் திடீரென்று பாஜக கூட்டணிக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியும் தினகரனும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற , தமிழக அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டவராக இருந்தார். தொடர்ச்சியாக சில வார காலமாக பொதுவெளியில் "தை பிறந்தால் வழி பிறக்கும்", தை மாத இறுதிக்குள் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இன்று திமுகவை சேர்ந்த சேகர்பாபுவை சந்தித்து 15 நிமிடங்கள் வரை பேசியது , தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பு தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு பெரிய அளவில் அதிர்வலைகளை தமிழக அரசியலில் உண்டாக்கியுள்ளது. பாஜக கூட்டணியில் இணைவார் என்று பேசப்பட்ட பேசப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் திமுகவை சேர்ந்த அமைச்சரை சந்தித்தது எதற்கு என்று கேள்விகள் தொடங்கியுள்ளன?
தனக்கு மிகவும் நெருக்கமான பாஜக அல்லது தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளாரா? என்ற சந்தேகங்கள் எழுத்தொடங்கியுள்ளது. பாஜக சார்பில் அவருக்கு கவர்னர் பதவியும் அவரது மகனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தர சம்மதம் தெரிவித்தாக இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்திகள் பரவி உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் இணைந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.