திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை! அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Anbumani
Anbumani
Published on

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் மகளின் திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைமையில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று பேசியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்பு மணி ராமதாஸ்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் இந்த ஆண்டு 450 டிஎம்சி தண்ணீர் உபரியாக சென்றுள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்கு மூன்று டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேவை. அதேபோல் தென் பெண்ணையாற்றில் ஆண்டுக்கு 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே இந்த தென்பெண்ணை, காவிரி உபரி நீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இதற்கு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளட்டும். ஆண்டுக்கு 20,000 கோடியை நீர் மேலாண்மைக்கு மட்டும் முதலமைச்சர் ஒதுக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளது. இதுவரை அந்த தேர்தல் வாக்குறுதியை, சட்டமாக இயற்றப்படவில்லை. எனவே உடனடியாக அதை புதிய சட்டமாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் வந்தால் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என தெரிவித்தார்கள். தற்பொழுது 10 கடைகளை கூட மூடவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மதுக்கடைகளை நடத்துபவர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை, அடுத்த கல்வியாண்டிற்குள் தமிழக அரசு சட்டமாக இயற்றும் என நம்புகிறோம்.

பாமக தலைமையில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கேற்றவாறு வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. எனவே தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை எடுப்போம்” என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com