நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் அதிரடி..! - மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகள்!

India new parliment
India new parliment
Published on

1. ஐசிஎஃப் பெரம்பூரில் உள்ளூர் ஆட்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்குக!

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. தமிழ்நாடு உட்பட நாட்டில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் மற்றும் அம்ரித் பாரத் இரயில்களின் பட்டியல் என்ன? அதிவேக எக்ஸ்பிரஸ் இரயில்கள் தயாரிக்கும் ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் விவரங்கள்? ஐசிஎஃப் பெரம்பூர் உட்பட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசு முன்மொழிகிறதா? ஜனவரி 1, 2026 நிலவரப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை என்ன? எனும் பல்வேறு விசயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

2. மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிடுக!

திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா நேரமில்லா நேரத்தில் வலியுறுத்தல்!

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இடைநிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டியதன் தேவை குறித்து மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா பேசுனார். அதன் விவரம் பின்வருமாறு:

அனைத்து வகை பயணங்களிலும் மூத்த குடிமக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே 40% மற்றும் 50% வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மார்ச் 2020உடன் நிறுத்தப்பட்டன. அதன் பின் இந்த இடைநீக்கம் திரும்பப் பெறப்படவில்லை. ஓய்வூதியத்தை நம்பியுள்ள முதியவர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத முதியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 காலகட்டத்தில் இந்தச் சலுகைகளை நிறுத்தி வைத்ததன் மூலம் அமைச்சகம் ரூ.2560.9 கோடியைச் சேமிக்க முடிந்தது என்பதை RTI பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்காக, குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் 3AC வகுப்புகளிலாவது இந்தச் சலுகைகளை மீட்டெடுக்க Parliamentary Standing Committee on Railways பரிந்துரைத்துள்ள போதிலும் மேற்கொண்டு அதில் நடவடிக்கை எதுவுமில்லை.

ரயில்வே அமைச்சர் உடனடியாக இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, இந்தச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் இதனால் நமது மூத்த குடிமக்கள் எளிதாகவும் மரியாதையுடனும் பயணிக்க முடியும் என்றும் ராஜாத்தி சல்மா எம்.பி. பேசினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை விரிவுபடுத்துமாறும் ஒன்றிய அரசை அவர் வலியுறுத்தினார்.

3. நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காதது ஏன்?

திமுக எம்.பி. பி. வில்சன்

தமிழ்நாட்டில் இயங்கும் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களின் (PACS) எண்ணிக்கை மற்றும் அவற்றில் சட்டப்பூர்வமாக தணிக்கைகள் முடிக்கப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். தணிக்கையாளர் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை அல்லது இன்னும் கணினிமயமாக்க நிலுவலையில் உள்ள சங்கள், தாமதத்திற்கான காரணங்கள் போன்ற விவரங்களையும் அவர் கோரியுள்ளார். முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் கணினிமயமாக்கல் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான சங்கங்களில் இன்னும் கணினி வழி அல்லது டிஜிட்டல் தணிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

தனது மற்றொரு கேள்வியில் பி. வில்சன் எம்.பி. அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி விவரங்களை கேட்டுள்ளார். NEP, 2020 அல்லது PM SHRI பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக நிதியைத் தடுத்து நிறுத்துவது நியாயமற்றது என்று கருதி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு EWCY&S மீதான நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளபோதிலும் நிதி விடுவிக்கப்படாததற்கான காரணங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

4. சமக்ர சிக்ஷா திட்டத்தின் நிதி

டாக்டர் கனிமொழி சோமு

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்படாத நிதியின் அளவு எவ்வளவு என்றும் அவ்வாறு செலவிடப்படாத நிதியை வேறு மாநிலங்களில் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளதா என்றும் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

5. சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரைவு விதிகளை வெளியிடுக!

திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா

இந்தியாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த வரைவு விதிகளை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார். சாதிகளைப் பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்கு முன்பு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

6. தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை

திமுக எம்.பி. எஸ். கல்யாணசுந்தரம்

தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அமைச்சகம் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். அறிவார்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், தானியங்கி பிரேக்கிங், சாலை சென்சார்கள் விபத்து கண்டறியும் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் குறித்து அரசின் திட்டங்கள் என்ன? விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை கொண்டு செல்ல எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.

7. சென்னை - பெங்களூரு NH-40ஐ மேம்படுத்தும் திட்டம் நிறைவுறுவது எப்போது?

திமுக எம்.பி. ஆர். கிரி ராஜன்

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் நிறைவு செய்ய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்றும் சென்னை, பெங்களூரு மற்றும் வேலூரை இணைக்கும் NH-40 நெடுஞ்சாலைக்கான ₹1,338 கோடி மதிப்பிலான திட்டத்தை விரைவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.

8. மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துக!

திமுக எம்.பி. எஸ்.ஆர். சிவலிங்கம்

விளிம்புநிலை சமூகத்தினருக்கு சம வேலைவாய்ப்பு எனும் நோக்கில் மாற்றுப் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தமிழ்நாடு சேர்த்திருப்பதை குறிப்பிட்டு ஒன்றிய அரசின் திட்டங்களின்கீழ், மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தது குறித்து திமுக எம்.பி. எஸ். ஆர். சிவலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு? மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சம வாய்ப்பை வலுப்படுத்த அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் கேட்டுள்ளார்.

9. தெற்கு வழித்தடங்களில் மட்டும் மோசமான இரயில் பெட்டிகள் ஏன்?

தர்மபுரி திமுக எம்.பி. அ. மணி

தெற்கு வழித்தடங்களில் ராஜதானி எக்ஸ்பிரஸ் இரயில்களில் இரயில் பெட்டிகளின் மோசமான நிலை மற்றும் தரமற்ற பயணிகள் சேவைகள் தொடர்பான கடுமையான புகார்கள் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டி தர்மபுரி எம்.பி. அ. மணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜதானி போன்ற பிற பிரீமியம் ரயில்களில் சேவைகள் அதிக டைனமிக் கட்டணங்களை வசூலித்த போதிலும், பயணிகள் கிழிந்த மற்றும் இடம்பெயர்ந்த இருக்கைகள், கரப்பான் பூச்சிகளின் தொல்லை, மோசமான தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற படுக்கை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் என்ன? தரத்தை மேம்படுத்துவதற்கும் சீரான சேவை தரத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/ எடுக்க முன்மொழியப்பட்ட திருத்த நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சூரியன் சும்மா ஜாலியா நிக்குதுனு நினைச்சீங்களா? அதுதான் இல்ல!
India new parliment

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com