சூரியன் சும்மா ஜாலியா நிக்குதுனு நினைச்சீங்களா? அதுதான் இல்ல!

Sun
Sun
Published on

காலையில் சூரியன் கிழக்கே உதிக்கிறது, மாலையில் மேற்கே மறைகிறது என்று பள்ளியில் படித்தது நினைவிருக்கும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்கு அத்துபடி. ஆனால் என்றைக்காவது நமது சூரியன் எதைச் சுற்றி வருகிறது என்று யோசித்தது உண்டா. 

சூரியன் ஒரே இடத்தில் சும்மாதான் நிற்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நமது சூரியன் ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தய வீரனைப் போல விண்வெளியில் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

சூரியனின் பயணம்!

நமது சூரியன் பால்வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸியின் மையத்தை சுற்றி வருகிறது. அதுவும் சாதாரண வேகத்தில் அல்ல, மணிக்கு எட்டு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் அது பயணிக்கிறது. நினைத்துப்பார்க்கவே தலை சுற்றுகிறது அல்லவா. இந்த வேகத்தில் சென்றாலும், பால்வெளி மண்டலத்தை ஒருமுறை முழுமையாகச் சுற்றி முடிக்க சூரியனுக்கு இருபத்து மூன்று கோடி வருடங்கள் ஆகிறது.

இதற்கு கேலக்டிக் வருடம் என்று பெயர். கடைசியாக சூரியன் இந்த இடத்தில் இருந்தபோது பூமியில் டைனோசர்கள் ஜாலியாக உலாவிக்கொண்டு இருந்தன. இப்போது நாம் இருக்கிறோம். அடுத்த முறை சூரியன் சுற்றி வரும்போது மனித இனம் இருக்குமா என்பது சந்தேகமே.

சூரியக் குடும்பம் உருவான விதம்!

சுமார் 460 கோடி வருடங்களுக்கு முன்பு விண்வெளியில் இருந்த மிகப்பெரிய தூசி மேகம் ஒன்று ஈர்ப்பு விசையினால் சுருங்கி வெடித்தபோதுதான் நமது சூரியன் பிறந்தது. சூரியன் உருவான பிறகு மிச்சம் இருந்த தூசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் கோள்களாக மாறின. ஒரு வீடு கட்டவே ஒரு வருடம் ஆகிறது, ஆனால் இந்த சூரிய குடும்பம் செட்டாவதற்கு பத்து கோடி வருடங்கள் ஆனது. 

சூரியனைத் தலைவனாகக் கொண்ட இந்த குடும்பத்தில் எட்டு கோள்கள், புளூட்டோ போன்ற ஐந்து குள்ளக் கோள்கள் மற்றும் இருநூற்று தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிலவுகள் உள்ளன. இவை அனைத்தையும் சூரியன் தனது ஈர்ப்பு விசையால் கட்டிப்போட்டு கூட்டிச் செல்கிறது.

இதையும் படியுங்கள்:
கருப்புச் சூரியன் காமராஜர் பிறந்த தின கவிதை!
Sun

எரியும் நெருப்புப் பந்து!

சூரியன் என்றால் எரியும் நெருப்பு என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் அங்கே எரிவதற்கு விறகோ பெட்ரோலோ இல்லை. அது ஒரு அணுக்கரு இணைவு நடக்கும் தொழிற்சாலை. ஒவ்வொரு விநாடியும் அறுபது கோடி டன் ஹைட்ரஜன் வாயு ஹீலியமாக மாறுகிறது. இது சாதாரண நெருப்பு அல்ல, ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பது போன்றது. அங்கிருந்து உருவாகும் வெப்பம்தான் நமக்கு வெயிலாக கிடைக்கிறது.

இப்போது ஒரு சுவாரசியமான தகவல். இன்று உங்கள் முகத்தில் படும் வெயில் எப்போது உருவானது என்று நினைக்கிறீர்கள். எட்டு நிமிடத்திற்கு முன்பு என்று நினைத்தால் அது தவறு. சூரியனின் மையப்பகுதியில் உருவாகும் ஒளிக்கதிர், அதன் மேற்பரப்பிற்கு வந்து சேர பல லட்சம் வருடங்கள் ஆகும். அப்படி கஷ்டப்பட்டு வெளியே வந்த ஒளி பூமிக்கு வரத்தான் எட்டு நிமிடங்கள் ஆகிறது. அதாவது இன்று நாம் பார்க்கும் சூரிய ஒளி உண்மையில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தபோதே சூரியனுக்குள் உருவானது. இது எவ்வளவு பெரிய ஆச்சரியம்.

இதையும் படியுங்கள்:
5 பில்லியன் வருஷம் கழிச்சு பூமி எப்படி இருக்கும்? சூரியன் நம்மள முழுங்கிருமா?
Sun

சத்தமில்லாத அலறல்!

சூரியன் அமைதியாக எரிவது போலத்தெரிந்தாலும், உண்மையில் அது பயங்கரமான சத்தத்தை எழுப்புகிறது. விண்வெளியில் காற்று இல்லாததால் அந்த சத்தம் நமக்குக் கேட்பதில்லை. ஒருவேளை விண்வெளியில் காற்று இருந்திருந்தால், சூரியன் எழுப்பும் பேரிரைச்சல் பூமியில் இருக்கும் நம் காதுகளை கிழித்துவிடும் அளவுக்குப் பலமாக இருக்குமாம். நல்லவேளையாக வெற்றிடம் நம்மை காப்பாற்றி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com