

காங்கிரஸ் தலைமை தொடர்ந்து திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைத்துக் கொண்டே வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் கூட்டாட்சி என்பதை ஏற்க முடியாது என்று எவ்வளவோ தெளிவு படுத்தியும், மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் திமுகவிடம் இம்முறை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியது. இதனால் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்டு, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் 22ஆம் தேதி தொடங்கும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று கூறினார்கள். இதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து செல்வப் பெருந்தகை கூறியும் இதுவரை பிரவீன் சக்கரவர்த்தி மீதோ, மாணிக்கம் தாகூர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ராகுல் காந்தியின் கண்ணசைவில் தான் அவர்கள் இவ்வாறு பேசி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே கூறப்படுகின்றது. இதனால் திமுக காங்கிரஸ் தலைமை மீது தொடர்ந்து அதிருப்தியுடன் இருந்து வருகிறது.
இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் திமுகவின் செயல்பாடு அமைந்துள்ளது. 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் இணைந்துள்ளது. திமுகவுடன் கூட்டணியா, அதிமுகவுடன் கூட்டணியா என்று மதில் மேல் பூனையாக இருந்த தேமுதிக கடைசியில் இன்று திமுக கூட்டணியுடன் இணைந்தது. பெரும் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுடன் மல்லுக்கட்டும் காங்கிரஸ் கட்சியிடம் முடியாது என்று நேரடியாகவே சொல்லி வருகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது வெறும் எண்ணிக்கையிலான கூடுதல் பலம் மட்டுமல்ல, அது ஒரு மிகச்சிறந்த அரசியல் சதுரங்க நகர்வாகவே பார்க்கப்படுகிறது.இது கூட்டணியின் வாக்கு வங்கியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தொகுதிப் பங்கீட்டில் மற்ற கட்சிகளுக்கு, குறிப்பாக அதிக இடங்களைக் கோரும் காங்கிரஸிற்கு ஒரு மறைமுக அழுத்தத்தையும் கொடுத்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் போது எல்லாம் திமுகவுக்கு மந்திரி சபையில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போது அமைச்சரவையில் காங்கிரசுக்கு என்றுமே இடம் கொடுத்ததில்லை. திமுக வரும் 22ஆம் தேதி தொடங்கும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை அழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்பொழுது திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்து விட்டதால் இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் த.வெ.க தான்.