

ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் உணவாக கோழி முட்டை இருந்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் முட்டையில் அதிக அளவு புரோட்டின் சத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருவதால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுத்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணாக்கர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முட்டைகளில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் முட்டையை விரும்பி சாப்பிடும் கோடிக்கணக்கான மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமான சில பிராண்டுகளின் முட்டைகளில் நைட்ரோஃபுரான் என்ற புற்றுநோய் உண்டாக்கும் கூறு இருப்பதாக வைரலான தகவல் மக்களை பீதியடைய செய்திருக்கும் நிலையில், மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும், இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ‘முதலில் சோதனைகளை நடத்தியது யார்? அவை அறிவியல்பூர்வமாக நடத்தப்பட்டனவா என்பது பற்றிய பின்னணியை நாம் உறுதிப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து ஆணையரிடம் விவரங்களை சேகரிக்குமாறு அறிவுறுத்துவேன். முட்டையில் புற்றுநோய்க்கான கூறுகள் இருப்பதாக பரவிய தகவலில் உண்மை இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு மக்கள் எந்தக் கவலையும் படுவதற்கான அவசியமில்லை’ என்றார்.
இதற்கிடையே கர்நாடகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உணவு மற்றும் பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்வில் முட்டையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த அம்சங்களும் இல்லை என்றும், அதனை சாப்பிடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முட்டை விவகாரம் விவாதத்தை கிளப்பிய நிலையில், மருத்துவ நிபுணர்கள் பலரும் தாமாக முன்வந்து இதுபற்றி தெளிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மனன் வோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இந்தப் பொருட்கள் மரபணு நச்சுத்தன்மை கொண்டவை என்று தெரியும்.
ஆனால், பெரிய அளவில் உட்கொள்ளப்பட்டால் மட்டுமே டிஎன்ஏ மாற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தற்போது கண்டறியப்பட்ட அளவு மிகச் சிறியது என்பதால் இது புற்றுநோய் வருவதற்குக் காரணமாகும் என்று நேரடியாகக் கூற முடியாது’ என்று விளக்கினார். அத்துடன், இந்த விவகாரத்தில் பார்வையிட வேண்டியது, FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்) எனும் உணவு ஒழுங்குமுறை அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.