
பலருக்கும் முட்டை சைவமா ? அசைவமா? என்ற கேள்விகள் நீண்ட காலமாகவே இருக்கிறது. முட்டை சைவம் என்று சமீப கால திணிப்புகள் இருந்தாலும் , இந்தியர்களை பொறுத்தவரையில் அது அசைவம் மட்டும் தான். முட்டை என்பது குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு அசைவ உணவாகும். அசைவ விரும்பிகளின் தினசரி உணவில் ஒரு வேளையாவது முட்டையை சேர்க்க விரும்புவார்கள்.
முட்டை சர்வதேச அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உணவாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. மேலும் முட்டையில் இருந்து இரும்புச்சத்து, பி12 , கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன
வளரும் குழந்தைகள், அதிக ஆற்றல் தேவைப்படுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினசரி உணவில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும், சருமத்தை பராமரிக்கவும், ஆற்றல் பெறவும் முட்டை அவசிய தேவையாக உள்ளது. ஆனாலும் முட்டைகளை சில உடல்நல கோளாறு உள்ளவர்கள் தவிர்த்தல் நலம்.
உடல்பருமன் உள்ளவர்கள்:
முட்டை சாப்பிடுபவர்கள், அது செரிமானம் ஆக தினசரி உடற்பயிற்சி செய்வது அல்லது உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்வது அவசியம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் முட்டையை தவிர்த்து விடுவது நலம். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளதால் , அது உடலில் கலோரிகளாக எரிக்கப் படாமல் கொழுப்பாக சேரும் அபாயம் உள்ளது. அது எடையை மேலும் அதிகரிக்கும் தன்மை உடையது. எடை குறைவாக இருப்பவர்கள் முட்டையை சாப்பிடலாம் .
ஒவ்வாமை உள்ளவர்கள்:
சிலருக்கு முட்டை சாப்பிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படக் கூடும். அவர்கள் முட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை அதிகரிக்கும் . முட்டை சாப்பிட்ட பிறகு வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
அதிக கொழுப்பு உள்ளவர்கள்:
கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, ஆனால் அதன் நுகர்வு கொழுப்பை அதிகரிக்க கூடியது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவை முற்றிலும் தவிர்க்கலாம்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்:
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் புரதம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகங்களில் அதிக அழுத்தம் ஏற்படலாம். இதனால் சிறுநீரகத்தின் நிலையை மோசமாக்க கூடும். மேலும் இதில் உள்ள கொழுப்பு சத்துக்களும் அதிக பாதிப்பைக் கொடுக்கும்.