அவசர உதவிக்கு 'இந்த' ஒரு நம்பர் போதும்! உங்களுக்கு 112 பற்றி தெரியுமா?

Emergency Contact Number
Emergency
Updated on

நாட்டில் பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளின் போது அரசின் சிறப்பு உதவி எண்களை அழைப்பது வழக்கம். குறிப்பாக காவல் துறைக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101 மற்றும் மருத்துவ அவசர உதவிக்கு 108 உள்ளிட்ட பல சிறப்பு உதவி எண்கள் நாடு முழுவதும் அமலில் உள்ளன.

பொதுமக்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அந்தந்த துறை சார்ந்த உதவி எண்களை அழைக்கலாம். இருப்பினும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு உதவி எண் இருப்பதால், சாமானிய மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவதில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்தக் குறையைப் போக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்து அவசரத் தேவைகளுக்கும் 112 என்ற உதவி எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இருப்பினும் இந்த உதவி எண் குறித்த விழிப்புணர்வு, பெரும்பாலான பொதுமக்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அவசர உதவி எண் 112-ஐ செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டில் விபத்துகள் நடக்காத வண்ணம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளின் போது அவசர மருத்துவ சிகிச்சையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ‘சேவ் லைப் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ்.சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் கூறுகையில், “சாலைகளில் விபத்துகள் நடந்தால் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க சாமானிய மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற பயம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிக முக்கியம்.

அவ்வகையில் முதல் படியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து அவசர உதவி எண்களையும் ஒருங்கிணைத்து, பொதுவான அவசர உதவி எண் 112-ஐ அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்த வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் இதுதொடர்பாக குறைதீர்ப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் விலை மீண்டும் உயர காரணம் இதுதான்.! இது நடந்தால் தான் விலை குறையுமா.?
Emergency Contact Number

112 அவசர உதவி எண்ணின் சிறப்புகள்:

* உங்கள் மொபைல் போனில் சிம் கார்டே இல்லை என்றாலும், சிக்னல் குறைவாக இருந்தாலும் 112 என்ற அவசர உதவி எண்ணை அழைக்க முடியும்.

* 112 அவசர உதவி என்னை நீங்கள் தொடர்பு கொண்ட உடன், ஜிபிஎஸ் மூலமாக உங்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து அருகில் உள்ள உதவி மையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

* 112 India App என்ற பிரத்யேக செயலி வழியாகவும் அவசர உதவியைப் பெறலாம். இந்த செயலியில் இருக்கும் Panic பட்டனை ஆபத்து காலங்களில் அழுத்தினால், உடனே உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: திடீரென உயர்ந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா.?
Emergency Contact Number
logo
Kalki Online
kalkionline.com