
மத்திய அரசின் அமலாக்கப்பிரிவினர், தங்கம், வைர நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜுவல்லரிகள் விஷயத்தில் பி.எம்.எல்.ஏ. என்ற பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதனால், பெரிய ஜுவல்லரிகள் சற்றே தடுமாற்றம் கண்டுள்ளன. ஆனாலும், இந்தியாவின் தங்க, வைர ஆபரணங்களின் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சராசரியாக, தங்க, வைர நகைகளின் ஆண்டு விற்பனை எட்டுலட்சம் கோடி அளவுக்கு நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தகவலை, அண்மையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய ஜெம் அண்டு ஜுவல்லரி உள்நாட்டுக் கவுன்சில் அமைப்பின் தலைவரான சையம் மெஹ்ரா தெரிவித்தார்.
“அமலாக்கத்துறையினர் நடவடிக்கை ஒரு பக்கம் என்றால், ஜி.எஸ்.டி.. ஹால்மார்க் குறியீடு தொடர்பான பிரச்னைகளும் இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்.
அதே சமயம், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் வியாபாரத்தைப் வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்பதையும் “லாபம்” என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கருத்தரங்குகள் நடத்தி, வியாபாரிகளுக்குப் புரிய வைக்கும் பணியையும் செய்து வருகிறோம்.இதுவரை நாடெங்கிலுமாக 150க்கும் அதிகமான லாபம் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. சென்னையில் நடைபெற்ற லாபம் கருத்தரங்கில் 300க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைக்காரர்கள் பங்கேற்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெம்ஸ் & ஜூவல்லரி வர்த்தகத்தினை ஊக்குவிப்பதற்காக 2022/23 இல் மூன்று இந்தியா ஜெம் & ஜூவல்லரி கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. அடுத்து, இந்தியாவில் நகைத் துறையை மேம்படுத்துவதற்காக, தீபாவளி நகைக் கண்காட்சியை நடத்துவதற்குத் தயாராகி வருகிறோம். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 2023 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை பிரம்மாண்டமான எக்ஸ்போ நடக்கிறது.
2,00000+ சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த எக்ஸ்போவில் 800க்கும் மேற்பட்ட நகை நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள். இதனை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் மட்டுமில்லாமல், இங்கிலாந்து, துபாய், பங்களாதேஷ் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் நூற்றுக்கும் அதிகமான “ரோடு ஷோ”க்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்போவிற்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆல் இந்தியா ஜெம் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் (GJC) உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆய்வகங்கள், ரத்தினவியல் வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழிலுக்கான தொடர்புடைய சேவைகளை உள்ளடக்கிய லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கியதாகும். தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் 360° அணுகுமுறையுடன் தொழில், அதன் செயல்பாடு மற்றும் அதன் காரணத்தை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் கவுன்சில் செயல்படுகிறது. ஜி.ஜே.சி., கடந்த 15 ஆண்டுகளாக, தொழில்துறை சார்பில் மற்றும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, அரசுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறது.” என்று கவுன்சிலின் துணைத்தலைவர் ராஜேஷ் ரோக்டெ குறிப்பிட்டார்.