அரசு பேருந்து சேவைகளை விடவும், இந்திய ரயில் சேவை தற்போது பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது. காரணம், நேரம் மற்றும் பண சேமிப்பு ஆகும். தற்போது, சென்னை பீச் டூ தாம்பரம் இடையே நான்கு ரயில் வழித்தடங்களிலும், சென்னை பீச் டூ எழும்பூர் இடையே மூன்று வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் புறநகர் மின்சார ரயில்கள், வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சமீபத்தில் சென்னை பீச்சிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பாதை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னை புறநகர் வழித்தடங்களில் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனாலும் அதற்கான பெட்டிகள் தயாராக இருந்தால் மட்டுமே இதற்கு சாத்தியப்படும். சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டும். தற்போது மும்பை புறநகர் ரயில்களுக்கு தானியங்கி கதவுகளுடன் கூடிய குளிர் சாதன புறநகர் ரயில் பெட்டிகள் இந்தத் தொழிற்சாலையில் தயாராகிக் கொண்டிருப்பதால், சென்னைக்கு வேண்டிய குளிர்சாதன ரயில் பெட்டிகளை இனிதான் தயார் செய்ய வேண்டி உள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு சென்னை பீச் டூ செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிர்சாதன ரயில்களை இயக்க ரயில்வேயுடன் ஒத்துழைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால், மொத்த மின்சார ரயிலில் ஒன்றிரண்டு குளிர்சாதன பெட்டிகளை மட்டும் வைத்து இயக்குவது சாத்தியமில்லை. மொத்த ரயிலுமே குளிர் சாதன வசதி செய்யப்பட வேண்டும்.
இதற்காகும் செலவு அதிகமாகும். அதனால் சென்னை பீச் டூ செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகள் வருவதற்கு சிறிது கால தாமதமாகும்” என்று கூறுகிறார்கள்.