தங்களது முன்னோர்களின் நம்பிக்கையைக் காக்கும் விதமாக இப்போதும் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் முதலோ அல்லது கடைசியோ ராம் என்றப் பெயரை இணைத்துப் பெயர் சூட்டுகிறார்கள் என்றுச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! உண்மைத்தான்.
ராம் ஜென்மபூமி என்றழைக்கப்படும் அயோத்திக்கு, 750 கிமீ தொலைவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் மாவட்டம்தான் பங்குரா. இந்த கிராமத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிட்டத்தட்ட 500 வருடங்களாக ராம் என்ற பெயரை பெயரின் முன்னோ அல்லது பின்னோ பயன்படுத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவர்களின் மூதாதயர்கள் வருடா வருடம் ஒரு ராமர் அந்த கிராமத்தில் பிறக்கிறார் என்று நம்பினார்கள்.
ஆனால் அது யார் என்று அறியமுடியாததால் அங்குப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்குமே ராம் என்ற பெயரைச் சேர்த்துதான் பெயர் வைத்து வந்தனர். தங்களது முன்னோர்களின் நம்பிக்கையை உடைக்கக்கூடாது என்பதற்காக இன்று வரை அந்த கிராமத்தில் ராம் என்ற பெயரை ஒவ்வொரு குழந்தைகளின் பெயருடனும் இணைக்கிறார்கள். எவ்வளவு மாடர்ன் பெயர்கள் வைத்தாலும் கூட ராம் இல்லாத பெயரே இல்லையாம். உதாரணத்திற்கு ராம்காளி, ராம்பாலவ், ராமாய், ராம்சரன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.
எவ்வளவு அரசியல் ரீதியான தொல்லைகள் வந்தாலும், எவ்வளவு முரண்பாடுகள் வந்தாலும் இன்று வரை அவர்கள் ராம் என்ற பெயரை விட்டுக்கொடுத்ததே இல்லை. தங்களது மதத்தின் மேல் எவ்வளவு பக்தி வைத்திருக்கிறார்களோ அதே அளவு மரியாதையை பிற மதத்தின் மேலும் வைத்துள்ளார்கள். ஆம், காலங்கள் மாற மாற அங்குள்ள கிராமங்களில் பல முஸ்லீம்கள் குடிப்பெயர்ந்தாலும் கூட, அவர்களுக்கான மரியாதையையும் அவர்களுடைய மதத்திற்கான மரியாதையையும் அளித்து வருகின்றனர்.
இன்றுவரை இரு மதத்திற்கும் இடையே ஒரு சிறு பிரச்சனைக் கூட வரவில்லையாம். அதேபோல் வெளி ஊரிலிருந்து குடிவரும் இந்துகளை ராம் என்று பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதேயில்லை. வழிவழியாக அங்கு இருக்கும் மக்களே ராம் என்ற பெயரை வைத்துக்கொள்கிறார்கள். ஆகையால் இந்த கிராமத்திற்கு ராம் பரா என்ற பெயரும் உண்டு.
அதேபோல் ராமரை மட்டுமே அவர்களின் குல தெய்வமாகக் கருதி வழிப்பட்டு வருகின்றனர். இந்த இடம் அயோத்தியை விட 1,200 முதல் 1,500 வருடங்கள் பழமையான இடமான இந்த இடத்தில் நிறைய மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும் பட்டுகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. அதேபோல் 400 வருடங்களுக்கு முன்னர் அயோத்தியிலிருந்து இந்த கிராமத்திற்கு வந்த ஹிந்து மக்கள் ராமர் கோவில் கட்டியதாகவும், அது இன்று வரை கம்பீரமாக நிற்பதாகவும் கூறப்படுகிறது.