பங்களாதேஷில் சமீபக்காலமாக அமைதியின்மை நீடித்து வருகிறது. ஆகையால், அந்த நாட்டு பிரதமர் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அங்கு தற்போது இடைக்கால ஆட்சி அமைவதாக செய்திகள் வந்துள்ளன.
பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது தற்போது பூதகரமாக வெடித்துள்ளது.
சாதாரண மாணவர்கள் போராட்டமாக தொடங்கிய இந்தப் போராட்டம் பின், பிரதமருக்கு எதிராகத் திரும்பியது. இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சூழ்நிலையில்தான். ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தனி விமானம் மூலம் வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.
மேலும் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இருந்தாலும் பங்களாதேஷில் வன்முறை குறையவில்லை என்றே கூறவேண்டும்.
இதனால், தற்போது அங்கு இடைக்கால அரசு நிறுவப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாட்டின் அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகளுடன் இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதில், ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சூழலில், இடைக்கால அரசை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
முகமது யூனுஸ் ஒரு சிறந்த தொழில்முனைவோர், பொருளாதார நிபுணர் மற்றும் சிவில் சமூகத் தலைவர் ஆவார். இவரின் மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் முறையின் முன்னெடுப்பில் பின்தங்கிய தொழில்முனைவோருக்குச் சிறியளவில் கடன்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் சமூகத்தில் பின்தங்கி இருந்த பலரும் பயன் பெற்றனர். இவரது பணிக்காக நோபல் பரிசு மட்டுமின்றி 2009ல் அமெரிக்காவின் அதிபரின் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
வறுமையை எதிர்த்துப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். ஆகையால்தான், மாணவர்களே ஒன்றுக்கூடி அவரை நியம்மிக்குமாறு வலியுறுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை இந்த பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரை பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர். இடைக்கால அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் 10 பேரை மாணவர்களே பட்டியலிட்டுள்ளனர்.