வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் வருகை தந்த விதம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது அதிரடி கருத்தினை தெரிவித்திருந்தார்.
வாரிசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் "ரசிகர்கள் தான் தனக்கு மிகப்பெரியபோதை"! என்று பேசினார். அவரது பேச்சு வைரலானது போலவே நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது லுக்கும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மிகவும் எளிமையாக கலைந்த தலைமுடி மற்றும் தாடியுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனும் விஜய்யின் லுக் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. “வாரிசு பட விழாவில் விஜய் பேசிக் கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்றவாறு உடை அணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள் ” என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருந்தார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாரிசு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யை தான் பார்த்ததாகவும் அவரது லுக் தனக்கு நெருடலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நடிகர்களை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார்.
எந்த நிகழ்ச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற புரிதலை இத்தகைய ஹீரோக்கள் தன்னை பாலோ செய்யும் ரசிகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும் அவரது பேச்சின் நியாயம் சிறப்பானதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தனது சமீபத்திய பேச்சில் விஜய் போன்ற சிறப்பான பெரிய நடிகரை இந்தளவிற்கு பொது வெளியில் யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 27 ஆண்டுகளாக ஊடகத்தில் பணியாற்றும் தனக்கு இந்த பேச்சு தனக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே தான் அவ்வாறு பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.