தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் விரைவில் 10 மற்றும் 12வது வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்திக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு 10வது மற்றும் 12வது வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு ஊக்கத்தொகையும் வழங்கினார். இதுதான் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான முதல் படியாக அமைந்தது. காலை முதல் இரவு வரை அசராமல் மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். இது பல மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது.
அதன்பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
விஜய் சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி மாணவ மாணவிகளை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மாணவர்களை ஜூன் 4ம் தேதிக்கு பின் நேரில் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்ற ஆண்டு போல் இல்லாமல், இந்தாண்டு சரியான முறையில் மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி வரவுள்ளதையடுத்து, அதற்கு முன்னரே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1500 மாணவர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என்றும், மொத்த நிகழ்ச்சிக்கு 75 லட்சம் தொகை செலவாகும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சாப்பாடு உள்ளிட்ட செலவுகளுக்கு 25 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் இந்த விழாவுக்கு பட்ஜெட் போடப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த முறை போலவே இந்த முறையும் 1500 மாணவ மாணவிகளுக்கும் தன்னுடைய கையால் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவர் வழங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாணவ மாணவிகளின் வாக்குகளை முழுவதுமாகப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
நடிகர் விஜய் The Goat படத்திலும், அடுத்து நடிக்கவிருக்கும் தனது கடைசி படத்திலும் முழு கவனத்துடன் பணியாற்றி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளுக்கு நடுவில் மாணவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். கடைசி படத்தை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்கவுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார். மாணவர்களின் ரிசல்ட் வெளியானபோதே விஜய் “விரைவில் சந்திப்போம்” என்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.