மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள நபாத்வீப் என்ற நகரத்தில் உள்ள ஒரு காலனியில் நடந்த சம்பவம் நெஞ்சை உருக்கும் சம்பவமாக திகழ்கிறதென்றே சொல்லலாம். அந்த காலனியில் குடியிருப்பவர்கள் குளிருக்காக வீட்டிலேயே அமைதியாக உறங்கி கொண்டிருந்தார்கள்.
நேற்று (3ம் தேதி) விடியற்காலையில், ஒரு ரயில்வே தொழிலாளர் காலனியில் உள்ள ஒரு குளியலறைக்கு வெளியே குளிர்ந்த தரையில் புதிதாகப் பிறந்த குழந்தை தனியாக இருந்ததை பார்த்தார். யாரோ இரவே பிறந்த குழந்தையை போட்டு விட்டு போய் விட்டார்கள்.அந்தக் குழந்தை பிறந்து சில மணிநேரங்களே ஆகியிருந்தது, பிறந்ததற்கான இரத்தத்தால் சூழப்பட்டிருந்த அடையாளங்கள் இன்னும் இருந்தன, போர்வையோ, குறிப்புகளோ எதுவுமே இல்லை, அருகிலும் யாரும் இல்லை.
ஆனால் குழந்தை முற்றிலும் தனியாக இல்லை. இங்கே தான் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
மனிதர்களுக்கு பதிலாக நாய்களின் கூட்டம், புதிதாகப் பிறந்த குழந்தையைச் சுற்றி ஒரு சரியான வளையத்தை உருவாக்கி இரவு முழுவதும் பாதுகாத்து கொண்டிருந்தன. அவைகள் குரைக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு நகரவோ இல்லை, இரவு முழுவதும் காவலுக்கு நின்று கொண்டிருந்தன.
இரவு முழுவதும் நாய்கள் யாரையும் அல்லது எதையும் அருகில் வர அனுமதிக்கவில்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் நாய்கள் ஆக்ரோஷத்தோடு இல்லாமல். விழிப்போடு இருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
“புதிதாகப் பிறந்த குழந்தை வெளியே படுத்துக் கொண்டிருக்கிறது. நாய்கள் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கின்றன. இதைப் போல நான் ஒருபோதும் பார்க்கவில்லை. மேலும், அவைகள் காவலாளிகளைப் போல பாதுகாத்து கொண்டிருந்தன," என்று சுக்லா என்கிற குடியிருப்பாளர் கூறுகிறார்.
அவர் மெதுவாக குழந்தையின் அருகில் வந்த போதுதான், நாய்கள் தங்கள் வட்டத்தைத் திறந்தன என்றும் அவர் கூறினார்.
அவர் குழந்தையை தனது துப்பட்டாவில் சுற்றிக் கொண்டு அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்தாள். குழந்தை முதலில் மகேஷ் கஞ்ச் என்கிற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கிருஷ்ணாநகர் சதார் என்கிற மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள், காயங்கள் எதுவும் இல்லை என்றும், தலையில் ரத்தம் வழிந்தததற்கான காரணம் பிரசவத்திற்குப் பிறகு சில நிமிடங்களிலேயே கைவிடப் பட்டதற்கான பிறப்பு அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறினார்கள்.
இரவில் இருட்டிய பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நபாத்வீப் காவல்துறை மற்றும் குழந்தைகள் உதவி அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கி, குழந்தையின் பராமரிப்புக்கான நடைமுறைகளையும் மேற் கொண்டிருக்கிறார்கள்.
ஆபத்து காலத்தில் கடவுள் மனிதன் ரூபத்தில் தான் வருவார் என்று சொல்ல முடியாது. கடவுள் விலங்குகளின் ரூபத்தில் கூட வரலாம் என்பதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.