ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி (First Lady Of The United States - FLOTUS) என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மனைவியைக் குறிப்பிடுகிறது. இது அமெரிக்கக் குடியரசுத் தலைவரது பணிக்காலத்துடன் இணைந்து, வழங்கப்படும் முறைசாரா பட்டமாகும். அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு மனைவி இல்லாத நிலையில் அல்லது அவரது மனைவியால் இப்பொறுப்பேற்க இயலாத நிலையில், தனது பெண் உறவினர் அல்லது நண்பரை வெள்ளை மாளிகை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக் கொள்ளலாம்.
இந்தப் பொறுப்பு அலுவல் முறையில் அமையாதது. எந்த அலுவல் முறை பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும், கடந்த நூற்றாண்டுகளில் முதல் சீமாட்டியின் (First Lady) பங்கு தெளிவுற்று வந்துள்ளது. முதலும் முடிவுமாக முதல் சீமாட்டி வெள்ளை மாளிகையின் அழைப்பாளர் ஆவார். அரசின் அலுவல் முறையான விருந்துகளையும், விழாக்களையும் ஒருங்கிணைப்பது இவர்தான். மற்ற அரசுகள் வழங்கும் விருந்துகளிலும், விழாக்களிலும் குடியரசுத் தலைவருடனோ அல்லது அவருக்கு மாற்றாகவோ வருகை புரிவதும் இவர்தான்.
அமெரிக்காவின் 47வது குடியரசுத் தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இருப்பார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், மெலனியா டிரம்ப் இரண்டாவது முறையாக, ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக ஆகியிருக்கிறார். டொனால்ட் டிரம்ப் முன்பு குடியரசுத் தலைவராக இருந்த போது, அவருடன் வெள்ளை மாளிகையில் இருந்த அவரது மனைவி மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் முழுமையாக இருக்க மாட்டார் என்று கருதப்படுகிறது.
மெலனியா பல்வேறு பணிகளை கவனித்துக் கொள்வதற்காக வாஷிங்டன் டி.சி, நியூயார்க் நகரம் மற்றும் புளோரிடாவின் பாம் பீச் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி செல்வார். அதனால் மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் முழுமையாக இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை டிரம்ப் ஆட்சியில் இருந்தபோதும் மெலனியா டிரம்ப் எல்லா நாளும் வெள்ளை மாளிகையில் இல்லை. இந்த முறையும் குறைவான நாட்களே வெள்ளை மாளிகையில் இருப்பார் என்கின்றனர்.
பொதுவாக அமெரிக்கக் குடியரசுத் தலைவருடன் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக, அவரின் மனைவி உடன் இருப்பது முக்கியம். குடும்பங்கள் இடையே அதிபருக்கு வரவேற்பு கிடைக்க, அவர் குடும்பத்துடன் இருப்பது முக்கியம் என்கிற நிலையுண்டு. ஆனால் இந்த முறையும் மெலனியா, பெரும்பானமையான நாட்களில் கணவருடன் இருக்க மாட்டார் என்றே கருதுகின்றனர்.
'இந்த முறை எனக்கு பதற்றம் இல்லை. நான் பதற்றம் இல்லாமல் வெள்ளை மாளிகைக்குச் செல்ல உள்ளேன். வெள்ளை மாளிகையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். இந்த முறை அனுபவத்தோடு செல்வதால் பிரச்சனை இல்லை', என்று மெலனியா டிரம்ப் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.