
1907-ம் ஆண்டு நிறுவப்பட்ட மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி 40,942 ஊழியர்களுடன் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் 5,466 ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுடன் 5,909 கிளைகளுடன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
இந்தியன் வங்கி, தனது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த ஜூலை 7-ம்தேதி முதல் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்கும் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை மேலும் அணுகக் கூடியதாகவும், எளிதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் ஏற்கனவே மினிமம் பேலன்ஸை பராமரிக்காததற்கான அபராதத்தை நீக்கியுள்ள நிலையில், இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதுமட்டுமின்றி தற்போது இந்தியன் வங்கி வாட்ஸ்அப் வங்கி மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக தொடர்ந்து மேலும் மேலும் புதிய சேவைகளைச் சேர்ப்போம் என்றும் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பேங்கிங் அம்சங்களை அணுக இந்தியன் வங்கியின் வாட்ஸ்அப் பேங்கிங் எண்ணுக்கு (8754424242) *ஹாய்* என்று அனுப்பவும் அல்லது “வாட்ஸ்அப் பேங்கிங்கைத் தொடங்கு” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
கணக்கிற்கான இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் (தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கின் கடைசி 10 பரிவர்த்தனை விவரங்கள் வழங்கப்படும்), மின்னஞ்சல் அறிக்கை (கடந்த 30 நாட்களுக்கான கணக்கு அறிக்கை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்), கால வைப்பு விசாரணை(Term Deposit), காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க, டெபிட் கார்டு பிளாக்கிங் போன்ற பல்வேறு சேவைகளை வாட்ஸ்அப் மூலம் செய்யும் ஆன்லைன் சேவை வசதியையும் இந்தியன் வங்கி வழங்கி வருகிறது.
இந்தியன் வங்கியின் வாட்ஸ்அப் வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு எந்த சேவைக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை என்றாலும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடனான வாடிக்கையாளரின் தரவுத் திட்டத்தின்படி கட்டணங்கள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயன்பாட்டு விதிமுறைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://www.whatsapp.com/legal/privacy-policy என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் தற்போது இந்தியன் வங்கி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியன் வங்கியில் சில கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களால் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாமல் உள்ளது.
இந்த செயல்படாத கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், உங்கள் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற புதிய KYC ஆவணங்களை உங்களுடைய இந்தியன் வங்கி கிளை அல்லது அருகிலுள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஏதாவது சந்தேகமோ அல்லது உதவியோ தேவைப்பட்டால் உங்கள் அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.