போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு துணையாக இருந்ததாக கூறி மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டார். இதற்கு பிக்பாஸ் வீட்டுக்கு போறது போல் நெனச்சுக்கோ என்று அறிவுரை கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். மேலும் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் எப்போதும் தனது பேச்சால் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். சில காலங்களுக்கு முன்னர் கூட த்ரிஷா பற்றி பேசி பெரிய சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். பல நடிகர் நடிகைகளின் வசவுகளையும் வாங்கிக்கொண்டார். இது கோர்ட் வழக்கு வரைச் சென்றது.
மிக குறைந்த காலம் இதுபோன்ற எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது அவரின் மகன் வழியே ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
இவரது மகன் அலிகான் துக்ளக் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்தார்.
அப்போது தனது மகனுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது “பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததுபோல் நினைத்துக்கொள். நிறைய புத்தகங்கள் படி.“ என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். எனது மகனின் செல்போன் எண் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் செல்போனில் இருந்துள்ளது.
அதை வைத்து கைது செய்துள்ளார்கள். போதைப்பொருளை ஒழிக்க நான் சரக்கு என்ற படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட தியேட்டர் கூட கிடைக்கவில்லை. ஓடிடியில் கூட வெளியிட விடாமல் தடுப்பது எந்த சக்தி? நேரம் வரும்போது பொங்குவேன்.” என்று பேசியிருக்கிறார்.
போலீஸார் துக்ளக்கிற்கும் போதைப் பொருட்கள் கடத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.