ரத்தப்போக்கு கண் வைரஸ் என்ற புதுவகை வைரஸால் ருவாண்டாவில் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவது மக்களை அச்சுருத்தி வருகிறது.
எப்போது எந்த வைரஸ் வேகமாக பரவி, கண்டம் தாண்டி வந்து உலக மக்களை அச்சுறுத்தும் என்பது தெரியவில்லை. ஏனெனில் கொரோனா வைரஸுக்கு பிறகு இந்த வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமே. அந்தவகையில் தற்போது புதுவகை வைரஸ் ருவாண்டாவில் வேகமாக பரவி வருகிறது.
மார்பரக் அல்லது ரத்தப் போக்கு வைரஸ் என்றழைக்கப்படும் இந்த புதுவகை வைரஸால் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 17 நாடுகளில் மார்பரக், mpox மற்றும் orpouche போன்ற வைரஸ்கள் அதிகம் பரவி வருகிறது. இதனால், நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பழம் உண்ணும் வௌவால்களிடமிருந்து பரவக்கூடியது. இது ரத்தம், உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்ற உடல் திரவங்களுடன் நேரடி தொடர்புக்கொள்வதால் மனிதர்களுக்குப் பரவுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தொண்டைப்புண், சொறி சிரங்கு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் எடை இழப்பு மற்றும் மூக்கு, வாய், கண்கள் போன்ற இடங்களில் ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும். பாதிக்கப்படுபவர்களில் 50 சதவிகிதம் பேர் இந்த கொடிய வைரஸால் இறக்க நேரிடும் என்பதால், இது கொடூரமான வைரஸ்களில் ஒன்றாக உள்ளது.
இது எபோலோ தொற்று போல் இருக்கிறது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். மருத்துவ கண்காணிப்பைப் பொறுத்தே உடல் நலத்தின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படுமே தவிர இதற்கான தடுப்பு சிகிச்சை என எதுவும் இல்லை.
ஆகையால், பாதிக்கப்பட்டவர்களை உலக சுகாதார அமைப்பு (WHO) சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்துதலை அறிவுறுத்தியிருக்கிறது.
இவ்வளவு கடுமையான பாதிப்புகளை கொடுக்கும் இந்த வைரஸ் மேலும் சில உலக நாடுகளுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை பரவ ஆரம்பித்தது என்றால், பலி வாங்காமல் போகாது என்பதே எச்சரிக்க வேண்டிய ஒன்றாகும்.