அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் (Election Campaigns) குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளுக்கும் ஈடுபடுத்தப்படுவதாக பல தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது குழந்தைகளிடம் கட்சியின் கொடிகளை கொடுத்து பேரணியாக செல்லவைப்பது, முழக்கமிடுவது போன்ற நடவடிக்கைகள் அதிகளவு நடைபெற்றுவருவதை பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் குழந்தைகள் எந்த ஒரு வகையிலும் அரசியல் பிரச்சாரத்தின்போது ஈடுபடுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணியின் போது வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவது போன்றவை கூடவே கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதேநேரம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் (Election Campaigns) குழந்தைகள் பங்கேற்றால் அது விதிமீறலில் சேராது . அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத்திற்காக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது .இந்திய தேர்தல் ஆணையத்தால் போடப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீதும் அந்தந்த கட்சிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.