

உலகமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ள வேளையில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசி ஒருவர், நானை ஜலப்பிரளயம் வந்து உலகம் அழியப் போகிறது என்று பீதியை கிளப்பியுள்ளார். இந்த செய்திகள் கானாவில் இருந்து ஆப்பிரிக்க நாடுகள் முழுக்க பரவியுள்ளன. இதை நம்பி பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.
கானா நாட்டில் தன்னைத் தானே தீர்க்க தரிசியாக அறிவித்துக் கொண்ட எபோ நோவா என்பவர், தன்னை கடவுளின் அவதாரம் என்று மக்களிடம் பரப்பியுள்ளார். இவரை உள்ளூர் மக்கள் நோவா என்றும் ஜீசஸ் என்றும் கூட அழைக்கின்றனர். இவர் கிழிந்த பழைய சாக்குத் துணிகளை அணிந்து கொண்டு, கையில் ஒரு பழமையான புத்தகத்தை ஏந்தியபடி வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவர் வெளியிடும் வீடியோக்கள் தற்போது உலகமெங்கும் வைரலாகி வருகின்றன. பைபிளில் வரும் நோவாவைப் போலவே, தானும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தூதுவன் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். எபோ நோவாவின் கணிப்பின் படி , நாளை கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 ) அன்று தொடங்கும் மழையானது நிற்காமல் 3 ஆண்டுகள் வர ராட்சசத்தனமாக பெய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தொடர் மழையானது , மிகப் பெரிய வெள்ளமாக மாற உள்ளது. இது பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை போல மிகப்பெரிய பேரரழிவை ஏற்படுத்த கூடும். இந்த ராட்சச வெள்ளத்தில் உலகில் உள்ள , மிக உயரமான அனைத்து சிகரங்களும் முழுகி விடும். இந்த பெரிய பிரளயம் ஒட்டு மொத்த பூமியையும் ஒரு முடிவில்லாத பெருங்கடலாக மாற்றும். வரவிருக்கும் ஜலப் பிரளயத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது , அனைத்து உயிரினங்களும் அழியக் கூடும்.
இந்த பிரளயத்தில் இருந்து ஒருவர் தப்பிக்க வேண்டும் என்றால் , அவர்கள் தன்னுடைய பேழையில் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாது அவர் ஒரு சில வீடியோக்களையும் பதிவேற்றி மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார். அந்த வீடியோக்களில் விலங்குகள் ஜோடி ஜோடியாகத் அவரது இருப்பிடத்தை நோக்கி வருவதைப் போல காட்சிப்படுத்தியுள்ளார். இந்த காட்சிகளைக் கண்டு ஒரு சிலர் நம்பத் தொடங்கியுள்ளனர்.
எபா நோவா கடவுளின் கட்டளைப்படி இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற 10 பிரம்மாண்ட மரப் பேழைகளை கட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சுமார் £2,50,000 செலவில் மரங்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஒவ்வொரு பேழையிலும் சுமார் 5000 பேர் வரை தங்க வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தாண்டி ஒரு பெரிய பேழை ஒன்று கோடிக்கணக்கான மக்களைக் தங்க வைக்கும் அளவிற்கு கட்டப்படுவதாகவும் கூறுகிறார்.
இதை பெரும்பாலான மக்கள்
நகைச்சுவையாகப் பார்த்தாலும் , குறிப்பிட்ட அளவில் மக்கள் இதைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். அதில் பலர் தங்கள் வீடு, நிலம் மற்றும் நகைகளை விற்று, அந்தப் பணத்தை எபோ நோவாவிடம் கொடுத்துள்ளனர் . புதிய நோவாவின் பேழையில் இடம் பிடிக்க வரிசையில் நிற்கின்றனர். இதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளது. விஞ்ஞானிகள் இந்த உலகம் அழியும் கூற்றை நிராகரித்தாலும் எபோ நோவாவின் இந்த 'டூம்ஸ்டே' (Doomsday) எச்சரிக்கை, 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.