

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பீட்சா மைதா மாவில் செய்வதால் உடல் நலத்திற்கு ஆரோக்கிய மானதல்ல. அதேசமயம் வீட்டிலேயே எளிய முறையில் பீட்சா செய்ய முடியும்.
பீட்சாவை மைதா மாவில் தான் செய்ய வேண்டும் என்பதில் வீட்டில் இருக்கும் தோசை மாவை வைத்தே சூப்பரான, சுவையான, ஆரோக்கியமான பீட்சாவை செய்ய முடியும். இந்த பீட்சா செய்வதற்கு அவென் (Oven) தேவையில்லை. தோசைக்கல் இருந்தால் போதும்.
அந்த வகையில் வழக்கமான கல் தோசையை பீட்சா சுவையில் (Pizza Dosa) குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது மிக எளிது. இது பாரம்பரிய தோசை மாவுடன், பீட்சா சாஸ், சீஸ் மற்றும் காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான ஆரோக்கியமான உணவாகும்.
மைதாவுக்குப் பதிலாக அரிசி, உளுந்து மாவு பயன்படுத்தப்படுவதால் செரிமானத்திற்கு நல்லது. காய்கறி சாப்பிடாத குழந்தைகளை கூட காய்கறிகளை விரும்பி சாப்பிட வைக்க இது ஒரு சிறந்த வழியாகும். கடைகளில் வாங்கும் பீட்சாவை விட, சுத்தமாகவும் 10 நிமிடங்களுக்குள் வீட்டிலேயே செய்துவிடலாம். வாங்க இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்கள் :
தக்காளி - அரை கிலோ
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
ஓரிகானோ (Oregano) - ஒன்றரை டீஸ்பூன்
பேசில் இலை (Basil) - பொடியாக நறுக்கியது 2 டீஸ்பூன்
பூண்டு - 15 பல்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் (Tomato Sauce) - 1 டீஸ்பூன் (சுவைக்கு)
பீட்சா சாஸ் செய்முறை:
* தக்காளியை முழுதாக துண்டுகளாக வெட்டாமல் நான்கு கோடு போட்டு தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும்.
* தக்காளி வெந்ததும் தோலை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
* பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் பேசில் இலை (Basil), ஓரிகானோ (Oregano) போட்டு சிறிது வதக்கியதும் அரைத்த தக்காளி பேஸ்ட் போட்டு கிளறவும்.
* அடுத்து மிளகு தூள், உப்பு, தக்காளி சாஸ் (Tomato Sauce) சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
* அதிக நேரம் கிளற வேண்டியதில்லை. சாஸ் அடர் சிவப்பு கலர் மாறியதும் தனியாக வைக்கவும்.
* இந்த சாஸை செய்து டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து தேவையான போது உபயோகப்படுத்தலாம்.
பீட்சா மேலே போட (Toppings) தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 1
சோள விதை - சிறிதளவு
ஜூக்கினி (Zucchini) - 1
வெண்ணெய் - 50 கிராம்
பீட்சா மேலே போட (Toppings) செய்முறை :
* தக்காளி (விதையை எடுத்து விட்டு), வெங்காயம், குடை மிளகாய், ஜூக்கினியை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும், அதில் தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், ஜூக்கினி, சோள விதை சேர்த்து 2 நிமிடம் வெண்ணெயில் நன்றாக பிரட்டி எடுக்கவும். நன்றாக வதக்க வேண்டிய அவசியமில்லை. வெண்ணெயில் பிரட்டும் போது சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
கல் தோசை பீட்சா செய்ய தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 1 கப்
மொசரெல்லா சீஸ் (Mozzarella cheese) - விருப்பத்திற்கு ஏற்ப
ஆலிவ் - 2
ஓரிகானோ (Oregano) - சிறிதளவு
சில்லி பிளேக்ஸ் (Chilli Flakes) - சிறிதளவு
எண்ணெய் அல்லது வெண்ணெய் - சிறிதளவு.
கல் தோசை பீட்சா செய்முறை :
* மொசரெல்லா சீஸை துருவிக் கொள்ளவும்.
* ஆலிவ்வை வட்ட வடிவில் வெட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றவும்.
* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மறுபக்கம் (வெந்த பக்கம்) செய்து வைத்துள்ள பீட்சா சாஸை தோசை முழுவதும் தடவவும்.
* அடுத்து பீட்சா மேல் வதக்கி வைத்து வெங்காயம், குடை மிளகாய் கலவையை அதன் மேல் போட்டு தோசை முழுவதும் பரப்பி விடவும்.
* அதன் மேலே துருவி வைத்துள்ள மொசரெல்லா சீஸை தூவவும்.
* கடைசியான அதன் மேல் ஆலிவ், ஓரிகானோ, சில்லி பிளேக்ஸ் தூவி மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் டேஸ்டியான கல் தோசை பீட்சா ரெடி.
* ஆலிவ், ஜூக்கினி கிடைத்தால் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதன் செய்முறை விளக்கம் பெரிதாக தெரியும். ஆனால் ஒவ்வொன்றும் செய்ய குறைந்தபட்சம் 5 முதல் 8 நிமிடங்களே ஆகும்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.