
விஜய் விட்டல் மல்லையா பிரபல இந்திய தொழிலதிபரும், முன்னாள் அரசியல்வாதியும், இந்தியாவிலிருந்து தப்பியோடியவரும் ஆவார்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து, நெருக்கடி அதிகமானதால், விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.
இந்தியாவில் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இவரைத் திரும்பவும் இந்தியா கொண்டு வர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மல்லையா, தான் பெற்ற அரசுப்பணத்தை 100 சதவீதம் திருப்பி தந்து விடுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். ஆனால் அதை வங்கிகளும், மத்திய அரசும் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘‘விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து ரூ.14 ஆயிரத்து 130 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.
இது தொடர்பாக விஜய் மல்லையா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
"கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன், வட்டியுடன் சேர்த்து ரூ.6 ஆயிரத்து 203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக என்னிடம் இருந்து ரூ.14 ஆயிரத்து 131 கோடி வசூலித்தும் நான் இன்னும் பொருளாதார குற்றவாளியாகவே உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்தார்.
நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைப் போல் 2 மடங்குக்கு அதாவது ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமான தொகையை வங்கிகள் எடுத்துக் கொண்டுள்ளன. இதற்கு சட்டரீதியான நியாயமான காரணங்களை ED மற்றும் வங்கிகள் சொல்லாவிட்டால், நிவாரணம் கோருவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான் நிவாரணம் கோருவேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "நான் ஒரு ரூபாய் கூட கடன் பெறவில்லை. திருடவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவாதம் அளித்தவன் என்ற முறையில், என் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார். "யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுபடுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை" எனக்கூறி உள்ளார்.
இந்நிலையில் மல்லையாவின் பிறந்தநாளுக்கு சமூக ஊடக தளமான X தளத்தில் ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி, “வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்தது. நாம் இருவரும் அதை அனுபவித்துள்ளோம். இதுவும் கடந்துபோகும்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் மல்லையா, “நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முயற்சி செய்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
இவரது பதிவிற்கு பதில் அளித்து நெட்டிசன்கள் அடுத்தடுத்து பல கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அதில் பெரும்பாலானோர், 'இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்' என கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர் வங்கி வேலை நாட்களிலும், மல்லையா டுவீட் போடுவதாக கிண்டல் செய்துள்ளனர். நெட்டிசன்களில் சிலர், 'இந்தியர்கள் கடுமையாக உழைத்த பணத்திற்கு யார் வட்டி கட்டுவார்கள்?' என்று கேட்டுள்ளனர்.