நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததை கண்டித்து உஸ்மானியா பல்கலைகழக போராட்ட குழுவினர் அல்லு அர்ஜுன் வீட்டிற்குள் புகுந்து தக்காளிகளை வீசி, பூந்தொட்டிகளை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த புஷ்பா 2 கடந்த டிசம்பர் 4-ம் தேதி உலகெங்கும் வெளியானது. அப்போது ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் ஒலிபரப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி, 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் படுகாயமடைந்து மூளை சாவு ஏற்பட்டு சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பூதாகரமாகி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் முழுக்க சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் சென்று ஆதரவு அளித்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
போலீஸ் அனுமதியை மறுத்தும், தனது 'புஷ்பா 2' படத்தின் முதல் காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் தெரிவித்திருந்தார். "சில மணிநேரம் சிறையில் இருந்த அல்லு அர்ஜூனை சந்திக்க தெலுங்கு சினிமா இன்டர்ஸ்டிரியே போயிருக்கிறது. அல்லு அர்ஜூனுக்கு என்ன கை, கால், கிட்னி போய்விட்டதா? நெரிசலில் சிக்கி இறந்து போன பெண் குறித்து கவலைபட்டீர்களா? அவரது மகனைக் குறித்து கவலைபட்டீர்களா? இந்த ஆதரவு மூலம் தெலுங்கு சினிமா உலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது? அல்லு அர்ஜூன் என்ன மாதிரியான மனிதர்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
முதல்வரின் இந்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் அங்கு பூதாகரமாகி வரும் நிலையில் ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டுக்குள் ஒரு குழுவினர் புகுந்து அங்குள்ள பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். மேலும் கற்கள், தக்காளிகளை வீட்டுக்குள் வீசினர். அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இளைஞர்கள் எனவும் உஸ்மானியா பல்கலைகழக போராட்டக் குழுவை (OU JAC) சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். பதற்றம் நிலவுவதால் அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது அல்லு அர்ஜுன் வீட்டில் இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் அல்லு அர்ஜுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் மற்றும் காவல்துறையால் அகற்றப்படும் வரை இறந்த பெண்ணுக்கு நீதி கோரி முழக்கமிட்டனர்.
இது ஒருபுறமிருக்க புஷ்பா 2 திரைப்படம் தற்போது வரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.