2026-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், வருமான வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் வரி விதிப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தற்போதைய 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. இவை வரி செலுத்துவோருக்கான விதிமுறை எளிமைப்படுத்துவதையும், நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் இந்த வரைவு விதிகளின்படி, புதிய வரிச் சட்டங்கள், வரி விதிக்கக்கூடிய சம்பளப் படிகள், முதலாளி வழங்கும் சலுகைகள் மற்றும் சில வகை வருமானங்களைக் கணக்கிடுவதற்கான தெளிவான வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல விதிகள் தற்போதுள்ள நடைமுறைகளை முறைப்படுத்தினாலும், நிறுவனம் வழங்கும் வீட்டு வசதி சலுகை, முதலாளி வழங்கும் பரிசுகள், கடன்கள் மற்றும் ஓய்வூதியப் பங்களிப்புகள் போன்ற சலுகைகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பதைச் சில விதிகள் தெளிவுபடுத்துகின்றன.
அந்த வகையில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள், வரி செலுத்துவோர் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க...
2026-27 நிதியாண்டிற்கான வருமான வரி வரம்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதையும், தற்போதுள்ள வரி வரம்புகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
அதேசமயம் இந்த புதிய விதிகள் குறிப்பாகச் சம்பளதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வரி கணக்கீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவன சலுகைகளுக்கான புதிய வரம்பு:
புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் தங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வழங்கும் தங்குமிட வசதி, உணவு, கார் போன்ற சலுகைகளுக்கான வரி கணக்கீட்டு முறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒரு தனியார் நிறுவனம் தங்களிடம் வேலைசெய்பவர்களுக்கு வீடு வழங்கினால், அதற்கான வரி அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து கணக்கிடப்படும். உதாரணமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிப்பவர்களுக்குச் சம்பளத்தில் 10 சதவீதமும், குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களில் 5 முதல் 7.5 சதவீதமும், மற்ற இடங்களில் சம்பளத்தில் 5 சதவீதமும் வரியாகக் கணக்கில் கொள்ளப்படும்.
ஒருவேளை நிறுவனம் ஒரு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து வழங்கினால், உண்மையான வாடகை அல்லது சம்பளத்தில் 10 சதவீதம் இதில் எது குறைவோ அதுவே வரிக்குரிய சலுகையாகக் கருதப்படும். இந்த விதி முக்கியமாக பெருநகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும்.
கார்களின் மாதாந்திர வரி விதிக்கக்கூடிய மதிப்பு:
அதேபோல், நிறுவனங்கள் ஊழியருக்கு அலுவலக மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கார் வசதியில் 1.6 லிட்டர் இன்ஜின் திறனுக்கு உட்பட்ட கார்களுக்கு மாதம் ரூ.5,000ம், அதற்கு மேற்பட்ட திறனுள்ள கார்களுக்கு ரூ.7,000ம் வரிக்குரிய வருமானமாகக் கணக்கிடப்படும். அதுவே டிசைவர் வசதி வழங்கப்பட்டால் கூடுதலாக சேர்க்கப்படும். இந்த நிலையான தொகைகள் சம்பள வருமானத்தின் கீழ் சலுகையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும்.
வட்டியில்லா கடன்களுக்கு வரி விதிக்கப்படலாம்:
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வட்டியில்லா அல்லது சலுகைக் கடன்களை வழங்கினால் அந்தப் பலனுக்கு வரி விதிக்கப்படலாம். அதாவது, நிறுவனத்திடம் இருந்து வட்டியில்லா அல்லது குறைந்த வட்டியில் கடன் வாங்கும் ஊழியர்களுக்கு, எஸ்பிஐ (SBI) வசூலிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் அந்தச் சலுகை வரிக்குரிய வருமானமாகக் கருதப்படும் என்றாலும், ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கும், குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சைக்காகப் பெறப்படும் கடன்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலுவலக உணவு:
அலுவலக நேரங்களில் முதலாளிகளால் வழங்கப்படும் உணவுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வரி இல்லாமல் இருக்கும். அதாவது அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு வேளை உணவின் மதிப்பு ரூ.200 வரை (இலவச உணவுகள் அல்லது பானங்கள்) இருந்தால் அதற்கு வரி கிடையாது. இது கேன்டீன் உணவுகள் மற்றும் உணவு வவுச்சர்களுக்கும் பொருந்தும். வேலை நேரத்தில் உணவு வழங்கப்பட்டு, அதன் விலை குறிப்பிட்ட வரம்பிற்குள் இருந்தால் இந்த விலக்கு பொருந்தும்.
முதலாளியிடமிருந்து பெறப்படும் பரிசுகள்:
பண்டிகை காலங்களில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் பரிசுகள் மற்றும் வவுச்சர்களுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.15,000ம், அதற்கு மேல் பெறப்படும் பரிசுகள் முழுமையாக வரிக்கு உட்படுத்தப்படும். நிறுவனங்கள் பரிசுகள் அல்லது வவுச்சர்களை வழங்கும் பண்டிகைக் காலங்களில் இந்த விதி குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.
ஓய்வூதிய நிதிகளில் கூடுதல் தொகைக்கு வரி :
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற ஓய்வூதிய நிதிகளில் நிறுவனம் செலுத்தும் பங்களிப்பு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
வரியில்லா வருமானம் தொடர்பான செலவுகள்:
வரியில்லா வருமானம் தொடர்பான செலவுகள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதையும் வரைவு விதிகள் விளக்குகின்றன. உதாரணமாக, ஒரு வரி செலுத்துபவர் சில முதலீடுகளிலிருந்து வரியில்லா வருமானத்தைப் பெற்றால் அந்த முதலீட்டின் ஆண்டு சராசரி மதிப்பில் 1 சதவீதம் தொடர்புடைய செலவுகளாகக் கருதப்படும் என்று விதிகள் கூறுகின்றன. இருப்பினும், அனுமதிக்கப்படாத தொகையானது வரி செலுத்துபவர் கோரிய மொத்த செலவுகளை விட அதிகமாக இருக்கக்கூடாது.
வெளிநாட்டு டிஜிட்டல் வர்த்தகத்திற்கும் வரி விதிக்கப்படும்:
தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களின் வருவாய் ரூ.2 கோடியை தாண்டினாலோ அல்லது 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டிருந்தாலோ, அவை இந்தியாவிற்கு வரி செலுத்த வேண்டியது கட்டாயம்.
- இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் 2026-27 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதால், வரி செலுத்துவோர் தங்களின் சம்பள பலன்கள் மற்றும் முதலீடுகளை இப்போதே திட்டமிட்டு கொள்வது நல்லது. வரி கணக்கீடுகளை எளிமையாக்குவதும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுமே இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கமாகும்.