இந்த ஆண்டு வருமான வரி தாக்கல்: இந்த ஒரு புதிய விதி தெரியலனா refund கிடைக்காது!

Income tax
Income tax
Published on

கடந்த நிதியாண்டிற்கு (FY 2024-2025) நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா? கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலில் முக்கியமான சில மாற்றங்களைப் பார்ப்போம். அவற்றை அறிவதன் மூலம் நீங்கள் கடந்த நிதியாண்டின் வருமான வரி தாக்கலை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.

வருமான வரிப்படிவங்களில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிரிவு 112A இன் படி, பங்குகள் மற்றும் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளின் நீண்டகால மூலதன ஆதாய வரி (Long term capital gains (LTCG)) 1.25 இலட்சம் ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களிலேயே உங்களது வருமான வரி தாக்கலைச் செய்ய முடியும்.

இதன்மூலம் இன்னும் பல்வேறு நபர்கள் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 பயன்படுத்த ஏதுவாகும். ஐடிஆர் 1 என்பது மிகவும் எளிமையான ஒரு படிவம். அதிலேயே நீண்டகால மூலதன ஆதாயவரியைக் கொண்டுவந்திருப்பது, அருமையானதொரு விஷயம்.

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கண்டிப்பாக தேவை. கடந்த நிதி ஆண்டுகளில் ஆதார் விண்ணப்ப எண்ணைக் (Enrollment ID) கொண்டு கூட வருமான வரி தாக்கல் செய்ய முடியும். ஆனால், இந்த ஆண்டு முதல் ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய இயலாது.

மூலதன ஆதாயங்கள் (Capital gains) தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் - மூலதன ஆதாயமானது சொத்திற்கு சொத்து மாறுபடும். உதாரணமாக, நிலம், பங்கு என்பவைக்கேற்ப மூலதன ஆதாயங்கள் மாறுபடும். எனவே மூலதன ஆதாயத்தைக் குறித்த விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். மூலதன ஆதாயமானது எப்போது நிகழ்ந்தது என்பதற்கு ஏற்ப வரி மாறுபடும்.

வருமானவரி விலக்கல்களுக்கு ஆதாரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் - 80C வருமான வரி விலக்கல்களுக்கு அவை சம்பந்தமான ஆவணங்களின் தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும். அதைப் போலவே 80D,80E, 80EE,80 EEA போன்ற இதர வருமான வரி விலக்கல்களுக்கும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, பொது சேமநல நிதி (Public Provident Fund) என்றால் கணக்கு எண், ரசீது எண் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

மொத்த வருமானம் (Gross income) ஒரு கோடியைத் தாண்டினால் சொத்து விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் - கடந்த நிதியாண்டு முதல் மொத்த வருமானம் ஒரு கோடியைத் தாண்டிய நபர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சம்பந்தமான விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
'கூலி unleashed'- ரஜினி படத்தலைப்பை டீகோட் செய்தால்...
Income tax

வீட்டு வாடகைப்படி (House rent allowance) வரி விலக்கு கோர விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் - வீட்டு வாடகைப்படி வரி விலக்கு பெறும் பட்சத்தில், எங்கு வேலை பார்க்கிறீர்கள், எவ்வளவு வீட்டு வாடகைப்படி, எவ்வளவு வீட்டு வாடகை கொடுக்கிறீர்கள் என்பது போன்ற விபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.

பான் மற்றும் ஆதார் எண் இணைத்தல் கட்டாயம் - பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் உங்களால் வருமான வரி தாக்கல் செய்ய இயலாது.

வருமானவரி தாக்கல் திருத்தங்கள் (revised return) கட்டணம் உண்டு - வருமான வரி தாக்கலை பிரிவு 139(8A) விதியின்படி 24 மாதங்களுக்குள் அதனைத் திருத்தம் செய்ய முடியும். ஆனால், பாக்கி உள்ள வருமான வரிக்கு அதிகமாக 50% வரி செலுத்த வேண்டும். அதிக பணத்தை மீள்கொடுப்பு (Refund) பெற முடியாது. ஏற்கனவே குறிப்பிட விட்டுப்போன வருமானத்தை மாற்றுவதற்காக மட்டுமே, இந்தத் திருத்தத்தைச் செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
உலக புகழ் பெற்ற 'மோனலிசா' ஓவியத்தின் பின்னால்... 13 வருட கதை!
Income tax

புதிய வருமானவரி முறை (New Tax Regime) இயல்பு நிலையாக (Default) இருக்கும் - எந்த வருமான வரி முறை என்று நீங்கள் குறிப்பிடாத பட்சத்தில் இயல்பு நிலையாக புதிய வருமானவரிமுறை இருக்கும். எனவே நீங்கள் பழைய வருமான வரிமுறையைப் பயன்படுத்த எண்ணினால், படிவம் 10-IEA பூர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த நிதியாண்டில் இயக்கத்திலிருந்த (Active) எல்லா வங்கி கணக்குகளும் தெரிவிக்கப்பட வேண்டும் - கடந்த நிதியாண்டில் இயக்கத்திலிருந்த உங்களது எல்லா வங்கி கணக்குகளும் தெரிவிக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தில் இல்லாத (dormant) வங்கி கணக்குகளை வேண்டுமென்றால் தவிர்க்கலாம்.

தோற்றுவாயில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted At Source (TDS)) பிரிவு வாரியாக தெரிவிக்கப்பட வேண்டும் - வருமான வரி தாக்கல் செய்யும்பொழுது ஏற்கனவே தோற்றுவாயில் கழிக்கப்பட்ட வரியைப் பிரிவு வாரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக பிரிவு 192 சம்பளத்தில் கழிக்கப்பட்ட வரி, பிரிவு 194A வட்டியில் கழிக்கப்பட்ட வரி.

இதையும் படியுங்கள்:
பெண்களின் புதிய ஃபேஷன் ட்ரெண்டான 'இந்த' பைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Income tax

பங்குகள் திரும்ப வாங்கப்பட்டால் (Buy back share), அவற்றைக் கருதப்பெறும் ஈவுத் தொகையாக (Deemed Dividend) குறிப்பிட முடியும்; அக்டோபர் 1, 2024 முதல், பங்குகள் திரும்ப வாங்கிக் கொள்ளப்பட்டால், அதன்மூலம் வரும் மூலதன ஆதாயத்தைக் கருதப்பெறும் ஈவுத்தொகையாக குறிப்பிட வேண்டும். அதற்கேற்ப படிவங்கள் ஐடிஆர் 2 மற்றும் ஐடிஆர் 4 இல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீங்கள் சீக்கிரமாக வருமான வரி தாக்கல் செய்ய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com