இந்தியாவின் அஞ்சல் துறை, கடிதங்கள் மற்றும் பார்சல்களை ட்ரோன்கள் மூலம் விநியோகிக்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை தொடங்கி விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்தான முழு தகவல்களையும் பார்ப்போமா?
அருணாச்சலப் பிரதேசத்தின் கடினமான மலைப்பகுதிகளில் தொடங்கிய இந்த திட்டம், கொரியர், எக்ஸ்பிரஸ் மற்றும் பார்சல் (CEP) சந்தையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் அக்டோபர் 21, 2024 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்சாய் மாவட்டத்தில் உள்ள சவ்காம் தபால் நிலையம் (PO) மற்றும் லோஹித் மாவட்டத்தில் உள்ள வாக்ரோ கிளை தபால் நிலையம் (BO) இடையே நடைபெற்றது.
சவ்காம் PO-விலிருந்து வாக்ரோ BO-விற்கு அஞ்சல் கொண்டு செல்லப்பட்ட ட்ரோன், காலை 10:40 மணிக்கு புறப்பட்டு காலை 11:02 மணிக்கு தரையிறங்கியது. இதன் மூலம், சுமார் 45 கி.மீ தூரத்தை வெறும் 22 நிமிடங்களில் கடந்தது. வழக்கமாக, இந்த தூரத்தை அருணாச்சலப் பிரதேச மாநில போக்குவரத்து பேருந்துகள் மூலம் கடக்க 2 முதல் 2.5 மணி நேரம் ஆகும். திரும்பும் பயணத்தில், வாக்ரோ BO-விலிருந்து காலை 11:44 மணிக்கு புறப்பட்ட ட்ரோன், சவ்காம் PO-வில் பகல் 12:08 மணிக்கு தரையிறங்கியது. இதன் மூலம், பயண நேரம் 22 முதல் 24 நிமிடங்களாக கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஒரு மருத்துவ பார்சலை ட்ரோன் மூலம் டெலிவரி செய்து இந்திய அஞ்சல் துறை ஒரு சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை நவீனமயமாக்குவதிலும், தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதிலும் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி, சுற்றுச்சூழல் நட்பு ரீதியிலும் அஞ்சல் விநியோகத்தை சாத்தியமாக்குகிறது.
2025 மே 16 அன்று, இந்தியா போஸ்ட், Amber Wings (IIT மெட்ராஸ் இன்குபேட்டட் பிராண்ட்) உடன் இணைந்து, மஹாராஷ்டிராவின் கர்ஜத் தபால் நிலையத்திலிருந்து மாதேரன் மலைப்பகுதி தபால் நிலையத்திற்கு 9.8 கிலோ அஞ்சல் பையை ட்ரோன் மூலம் வெறும் 15 நிமிடங்களில் வெற்றிகரமாக கொண்டு சென்றது. இது கடினமான மலைப்பகுதிகளில் சாலைகள் இல்லாத இடங்களில் அஞ்சல் சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அஞ்சல் துறை SKYE AIR Mobility Private Limited என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ட்ரோன் மூலம் அஞ்சல் விநியோகம், பயண நேரத்தைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல், அஞ்சல் விநியோகத்தில் நம்பகத்தன்மையையும், கடினமான மலைப்பகுதிகளில் அஞ்சல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் உதவும். வாக்ரோ BO அமைந்துள்ள பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விநியோக சேவைகளை மேம்படுத்துவதே இந்த POC-ன் முக்கிய நோக்கம்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், அஞ்சல் துறை மற்ற கடினமான மற்றும் மலைப்பகுதிகளிலும் ட்ரோன்களின் பயன்பாட்டை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் மணிக்கு 120 கி.மீ வரை வேகத்தில் செல்லக்கூடியதாகவும், 100 கி.மீ தூரம் வரை பயணிக்கக்கூடியதாகவும், 3 கிலோ வரை பொருட்களை கொண்டு செல்லக்கூடியதாகவும் உள்ளன.
அதேபோல் ஒட்டுமொத்தமாக, ட்ரோன் விநியோக சேவை சந்தை 2024 இல் 1.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 இல் 2.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து, 2032 ஆம் ஆண்டுக்குள் 18.26 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 31.3% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) குறிக்கிறது. இது உலகளாவிய அளவில் ட்ரோன் விநியோக சேவைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.