
வந்தாச்சு ரக்ஷா பந்தன் பண்டிகை! மும்பை கடைகளில் வண்ண-வண்ண ராக்கி கயிறுகளின் விலை ரூபாய் 10 /- முதல் 1000/- வரை. வெள்ளி மற்றும் தங்க ராக்கிகளின் விலையோ மயக்கம் போட வைக்கும்.
ரக்ஷா பந்தன் தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டி, அவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்கையில், பதிலுக்கு சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளிப்பார்கள். மேலும் குடும்ப ஒற்றுமை யையும், நல்லிணக்கத்தையும் "ரக்ஷா பந்தன்" வளர்க்கிறது என்பது நிதர்சனம்.
புராணங்களில் ரக்ஷாபந்தன்:
மகாபாரதத்தில், போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் மணிக்கட்டில் ரத்தம் வடிந்தது. அதைக் கண்ட பாண்டவர்களின் மனைவியாகிய திரௌபதி, ரத்தம் வடிவதை தடுப்பதற்காக, தனது புடவையின் ஒரு பகுதியை உடனே சர்ரெனக் கிழித்து, கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். ரத்தம் நின்றது. இந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதைத் தொட்டதால், திரௌபதியை தன்னுடைய சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்னைகளிடமிருந்து, திரௌபதியைக் காப்பதாக வாக்களித்தார்.
திருதாஷ்டிரர் அரண்மனையில் நடந்த சூதாட்டத்தில், கௌரவர்கள் தோற்க, திரௌபதியை துச்சாதனன் துகிலுரிகையில், திரௌபதி கிருஷ்ணரை வேண்ட, திரௌபதியின் மானத்தை கிருஷ்ணர் ஆடையளித்து காப்பாற்றினார். ரக்ஷாபந்தன் விழாவிற்கு இதுவே பிள்ளையார் சுழியெனக் கூறப்படுகிறது.
வரலாற்றில் ரக்ஷாபந்தன்:
அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுக்கையில், அவர் வடக்குப் பகுதியைக் கைப்பற்றிய பின் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னர் வலிமை மிகுந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட அலெக்ஸாண்டரின் மனைவி ரோஷனா, அலெக்ஸாண்டர் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று எண்ணி, அவரது கையில் கட்டிக்கொள்ள புனிதத்தன்மை கொண்ட ஒரு நூல் கயிறை கணவருக்கு அனுப்பிவைத்தார். அலெக்ஸாண்டரும் அதை, தன்னுடைய மணிக்கட்டில் கட்டிக்கொண்டார். என்ன ஆச்ரியம்..!! அலெக்ஸாண்டரின் கை மணிக்கட்டில் கட்டியிருந்த நூல் கயிறைப் பார்த்த போரஸ், அவரை வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும், அலெக்ஸாண்டரை விட்டுவிட்டார்.
ராக்கி கயிறு கட்டும் முறை:
ராக்கி கயிறை முதலில் புனிதமான நீரில் நனைக்க வேண்டும். கைகளில் கயிறை வைத்துக்கொண்டு, கண்களை மூடி சகோதரனின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.
பின்னர் சகோதரனின் வலது கை மணிக்கட்டில் கட்டி அதன் மீது சிறிது மஞ்சள்-குங்குமத்தை லேசாக போட்டு, இனிப்பு வழங்க வேண்டும்.
உபரி தகவல்கள்:
சொந்த சகோதரர்கள் இருக்கின்ற மற்றும் இல்லாத அநேக பெண்கள், தங்களுக்கு மிகவும் தெரிந்த நல்ல மனப்பான்மை உடைய சில மனிதர்களை ராக்கி சகோதரர்களாக பாவித்து, ராக்கி கயிறு கட்டுவதுண்டு. ராக்கி சகோதரரிடமிருந்து, பரிசை இத்தகைய சகோதரிகள் எதிர்பார்ப்பதில்லை. வெளி மாநிலம்//வெளிநாடுகளில் சகோதரர்கள் வசித்தால் கூட, சகோதரிகள் ராக்கி கயிறைக் கண்டிப்பாக அனுப்பிவிடுவார்கள்.
தொடர்கின்ற 50 வருட ராக்கி பந்தம்;
50 வருடங்களுக்கு முன்பு, எனக்குத் தெரிந்த குஜராத்தி பையன் ஒருவன் வேறு மதப்பெண்ணை காதல் திருமணம் புரிய, அந்த பையனது குடும்பமே அவனை விலக்கி வைத்தது.
ரக்ஷாபந்தனுக்கு சகோதரிகள் ராக்கி கட்டமாட்டார்கள் என்று தனது கடைக்கு வந்த ஒரு பெண்ணிடம் கூறி வருத்தப்பட்டான். அதைக் கேட்ட அந்த பெண் ராக்கி கயிறு ஒன்றை வாங்கி வந்து, அவனுக்கு கட்ட, மிகவும் சந்தோஷப்பட்டு "ஸிஸ்டர்" என அழைத்து அவளுக்கு சின்ன காட்பரீஸ் சாக்லேட் கொடுத்தான். அந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் அவனுக்கு ராக்கி கட்ட ஆரம்பித்தாள் அப்பெண். அவ்வப்போது ஆறுதலும் கூறுவாள். ஏதாவது அட்வைஸ் கேட்பான். மனக் கவலைகளைப் பகிர்வான். பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வான். அவன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பான். அந்தப் பெண்ணும், அதேபோல் அவனை அழைப்பாள். எல்லோரிடமும் பெருமையாக என்னுடைய "ராக்கி ஸிஸ்டர்" என அறிமுகப்படுத்துவான்.
பல வருடங்கள் சென்றபின் விலகியிருந்த குடும்பத்தாருடன் அவன் சேர்ந்த பிறகும் கூட, ராக்கி ஸிஸ்டரின் ராக்கியை எதிர்பார்ப்பான். "ராக்கி ஸிஸ்டரின்" ராக்கியைக் கட்டிக்கொண்ட. பிறகுதான், தனது ஸிஸ்டரின் ராக்கியைக் கட்டிக்கொள்வான்.
சிறு தொழில் செய்து கொண்டிருந்தவன் இப்போது பெரிய பிஸினஸ்மேன். நல்ல மனம் கொண்டவன். பேச நேரம் கிடையாது என்றாலும், ரக்ஷாபந்தன் கயிற்றை மறக்காமல் கூரியர் வழியே அந்தப் பெண், ராக்கி பிரதருக்கு அனுப்பி விடுவாள். ராக்கி கிடைத்த உடனே, "ஸிஸ்டர்! ராக்கி ஆ கயா! தாங்க்ஸ்! " என்று பேசிவிடுவான் ராக்கி சகோதரன்.
மனதிற்கு நிறைவினைத் தரும் வகையில், கைப்பிடித்த காதல் மனைவியுடன் அவனது குடும்பம் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. கூடப்பிறந்த சொந்தமாக இல்லாவிட்டாலும் தொடரும் இந்த 50 வருட ராக்கி பந்தம், நட்பிற்கும் ஒரு படி மேல் உயர்ந்ததாகும்.