

கோவை மதுக்கரை போன்ற வனப்பகுதிகளில் ரயில்களில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெப்ப இமேஜிங் வசதி கொண்ட அதிநவீன ட்ரோன்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் ரயில் பாதையை நெருங்குவதை முன்கூட்டியே அறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதுடன், யானைகள் வேகமாக நகர்ந்து தண்டவாளத்தின் அருகில் வரும் பொழுது ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் சத்தத்தை ஏற்படுத்தி யானைகளை பாதுகாப்பாக வனப் பகுதிக்குள் வழிநடத்துகிறது. அத்துடன் இந்த ட்ரோன்கள் மூலம் யானைகளை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கவும் முடிகிறது.
வனப்பகுதியில் மனித தொடர்பில்லாமல் சுற்றித் திரியும் காட்டு யானைகளை கண்காணிப்பதற்காகவும், யானைகளுக்கு இடையே நடக்கும் மோதலை கண்டறியும் வகையிலும் அதிநவீன ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை 2 நாட்கள் பயணமாக கேரளாவிற்கு வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வன ஊழியர்களுக்கு காட்டுப்பகுதியில் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், யானைகளை அமைதிப்படுத்தி மிகத் துல்லியமாக காட்டிற்குள் பாதுகாப்பாக விரட்டும் வேலையையும் செய்ய உதவும். அத்துடன் யானைகளுக்குள் நடக்கும் மோதல்களை கண்காணித்து அதற்கான தீர்வைக் காணவும், யானைகள் எதிர்கொள்ளும் துன்பங்களை தெரிந்து கொள்ளவும் இந்த ட்ரோன் உதவியாக இருக்கும். இது வனவிலங்கு பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகும்.
ஏற்கனவே கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வனத்துறைகளுக்கு ட்ரோன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.